‛சாரதா பீட்’ வழித்தடத்தை திறக்க பாக்., அரசு சம்மதம்? 

  Newstm Desk   | Last Modified : 25 Mar, 2019 05:50 pm
pakistan-government-okays-for-opening-saradha-peeth-corridor-sources

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள, ஹிந்துக்களின் புனிதத்தலமான, சாரதா பீடத்திற்கு செல்லும் பாதையை திறக்க, பாக்., அரசு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

காஷ்மீர் பண்டிட்டுகளின் முக்கிய வழிபாட்டு தெய்வமாக கருதப்படுபவள், சாரதா தேவி. கல்வி கடவுளான சரஸ்வதியின் அம்சமாக பார்க்கப்படும் சாரதா தேவிக்கான வழிபாட்டுத்தலம், 12 - 13ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. 

இது, தற்போது, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சென்று வரவும், பல்வேறு வேத பண்டிதர்கள், மகான்கள் கல்வி பயின்ற, இலங்கியங்கள், ஆன்மிக நுால்களை எழுதிய இடத்திற்கு தங்கு தடையின்றி சென்று வரவும், இரு நாட்டு அரசுகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காஷ்மீர் பண்டிட்டுகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், சீக்கியர்களின் புனித தலத்திற்கு சென்று வர சிறப்பு பாதை அமைத்து, இந்தியாவில் வசிக்கும் சீக்கியர்கள் பாகிஸ்தானில் உள்ள புனிதத்தலத்தை பார்வையிட அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை தொடர்ந்து, தற்போது, சாரதா பீடத்தை பார்வையிட சிறப்பு வழித்தடம் அமைக்கவும், அதற்கான பாதையை திறந்து விடவும், அந்நாட்டு அரசு சம்மதம் தெரிவத்துள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

ஹிந்துக்கள் குருவாக போற்றும், ஆதி சங்கரர் இந்த பீடத்தில் தான் பல்வேறு ஆன்மிக நுால்களை இயற்றியதாகவும், சாரதா தேவியின் அருளால் ஞானம் பெற்றதாகவும் நம்பப்படுகிறது. பாக்., பிரதமர் இம்ரான் கானின் இந்த நடவடிக்கைக்கு, அந்நாட்டு ஹிந்துக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

எல்லை கட்டுப்பாட்டு கோட்டிற்கு 10 கி.மீ., அப்பால் இருக்கும் இந்த கோவிலுக்கு சென்று வர, விரைவில் உரிய அனுமதி கிடைக்கும் என நம்பப்படுவதால், காஷ்மீரை சேர்ந்த ஹிந்துக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close