உலகிலேயே மிக நீளமான ராட்சத குகை எது தெரியுமா !

  இளங்கோ   | Last Modified : 19 May, 2019 07:10 pm
what-s-the-giant-cave-in-the-world

மலையில் பொந்துகளாக காணப்படும் குகைகள், இயற்கையே வடிவமைத்த வாழ்விடங்களாகத் திகழுவதோடு, காட்டில் வாழும் சில உயிரினங்களின் இருப்பிடமாகவும் இருக்கிறது. அக்காலத்தில் மனிதர்கள் தங்கள் பாதுகாப்புக் கருதி, அதிகம் தேர்ந்தெடுத்த வசிப்பிடங்களாகவும் குகைகள் இருந்து வந்தன. 

உலக அளவில் சில குகைகள், ஆன்மீகப் பெரியோர்கள் தவம் புரிந்த அல்லது உலகுக்கு உபதேசம் அளிப்பதற்கான ஞானோதயம் பெற்ற இடங்களாகவும் உள்ளன. இந்தியாவில் பல மலைக் குகைகள், சிற்பங்களும் சித்திரங்களும் நிறைந்த கலைப்படைப்புகளாக விளங்குகின்றன. இத்தகைய குகைகளில் மிகவும் நீளமான, பெரிய குகை அமெரிக்காவில் உள்ளது. இந்த இராட்சத குகை 640 கிலோ மீட்டர் நீளமுடையது.

உலக அளவில் இரண்டாவது இடம் பிடித்துள்ள மெக்சிகோவில் உள்ள சாக் ஆக்டன் குகையின் நீளத்தைவிட இது இரு மடங்கு அதிகமாகும். இவ்வளவு நீளமான குகைக்கு அதன் தன்மைக்கு ஏற்ப மம்மூத் கேவ் என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது. தமிழில் இதனை ராட்சத குகை என்றும் அழைக்கலாம்.

இந்த குகை அமெரிக்காவின் கெந்துகி மாகாணத்தில் அமைந்துள்ளது. அந்த மாகாணத்தின் எட்மன்ஸன் மாவட்டத்தில் பெரும் பகுதியும் ஹர்ட் மற்றும் பேரன் ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளுமாக இது பரந்து விரிந்துள்ளது. கெந்துகி மம்மூத் கேவ் நேஷனல் பார்க் என்ற பெயரிலான இந்தப் பூங்கா, 52 ஆயிரத்து 830 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. இந்தப் பூங்காவின் நடுவே கிரீன் ரிவர் எனப்படும் பச்சையாறு ஓடுகிறது.

வரலாற்றுச் சின்னங்களும், வித்தியாசமான உயிரினங்களும் நிறைந்த இந்த ராட்சத குகையைச் சுற்றி  தேசியப் பூங்கா  உள்ளது. இயற்கையாக அமைந்துள்ள இந்த ராட்சதச குகை, சுண்ணாம்புப் பாறைகளால் ஆனதாகும். கெந்துகி மாகாணத்தில் இப்படியொரு ராட்சத குகை இருப்பது, கடந்த 18-ஆம் நூற்றாண்டில்தான் வெளியுலகுக்குத் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

ராட்சத குகையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் ஆய்வுகள் மூலம் புதிய புதிய குகைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் பார்வைத்திறனற்ற கெந்துகி குகை இறால், இருவகை கெந்துகி குகை மீன்கள், இண்டியானா வௌவால் உள்ளிட்ட அரிய வகை உயிரினங்கள் காணப்படுகின்றன.

கெந்துகி தேசியப் பூங்கா சார்பில் இந்த ராட்சத குகையில் பல்வேறு சுற்றுலாத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை குகைக்குள் சுற்றிப் பார்க்கும் வகையிலான மின்னொளி பயணத் திட்டமும் இங்கே செயல்படுத்தப்படுகிறது. இதற்கு மாற்றாக, சுற்றுலாப் பயணிகளே தங்களது கரங்களில் பாரஃபின் மெழுகு பொருத்தப்பட்ட லாந்தர் விளக்குகளை ஏந்தியபடி சுமார் 2 மணி நேரம் சுற்றிப்பார்க்கும் சுற்றுலாவும் மிகப் பிரபலமடைந்துள்ளது.

குகைக்கு அடியில் ஓடும் சுரங்க நீரில் சுற்றுலாப் பயணிகளை படகுகளில் அழைத்துச் செல்லும், ஈக்கோ ரிவர் டூர் என்ற பெயரிலான சுற்றுலாவும் ஏராளமானோரைக் கவர்ந்துள்ளது. ஆண்டுக்கு சுமார் 4 லட்சம் சுற்றுலாப் பயணிகள், கெந்துகி மம்மூத் கேவ் என்ற ராட்சத குகையைக் கண்டு ரசித்து வருகின்றனர்.

மிகப் பெரிய குகைக்குள் சென்று இயற்கை அதிசயங்களையும், வரலாற்று ஆச்சர்யங்களையும் சுற்றிப் பார்ப்பது, பூமிக்கு அடியில் ஒரு மர்ம உலகத்தை தரிசித்த உணர்வைத் தருவதாக இங்கு சென்று வரும் சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close