அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி

  அபிநயா   | Last Modified : 21 Sep, 2019 09:50 am
prime-minister-is-all-set-for-his-america-visit

செப்டம்பர் 27 அன்று நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டம் மற்றும் ஹூஸ்டன் நகரில் அவருக்கு அளிக்கப்படும் வரவேற்பு நிகழ்ச்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா புறப்பட்டார்.

பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க ஹூஸ்டன் நகரம் பெரிய பெரிய பேனர்களுடன் தயாராகிக் கொண்டிருப்பதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், சையது அக்பரூதீன் மற்றும் அமெரிக்காவுக்கான இந்திய தூதரான ஹர்ஷவர்தன் ஷ்ரிங்கலா இருவரும் பிரதமரின் அமெரிக்கப் பயணத்திற்கு ஏற்பாடுகள் செய்வதில் முனைப்பாக இருந்தனர்.

அமெரிக்காவின் எரிபொருள் வர்த்தகத்தின் தலை நகரமென கருதப்படும் ஹூஸ்டன் நகரில் உள்ள, என்.ஆர்.ஜி அரங்கத்தில், வரும் செப் 22., அன்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு நடக்கவிருக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக பிரதமர், வெள்ளிக்கிழமை (நேற்று), தன் அமெரிக்க பயணத்தை தொடங்கினார்.

வரும் செப் 27., ஆம் தேதி நடக்கவுள்ள ஐக்கிய நாடுகளின் பொது சபை கூட்டத்தில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் விவகாரத்தைக் குறித்து பேச உள்ளதாக வெளியுறவு துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி கூறியதையடுத்து, இந்தியாவின் நிரந்தர தூதரான  சையது அக்பரூதீன் அதற்கு பதில் தெரிவித்திருந்தார். 

அவர் கூறுகையில், "உலக நாடுகளின் மத்தியில் நம்மை குற்றவாளியாக காட்டும் முயற்சியில் பாகிஸ்தான்  ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தானின் தீவிரவாத மிரட்டலுக்கே செவி சாய்க்காத நம்மை, அதன் வெறுக்கத்தக்க பேச்சுகள் எந்த வகையிலும் பாதிக்க போவதில்லை. உலக நாடுகளின் முன்னிலையில் இந்தியாவை ஒரு போதும் பாகிஸ்தானால் குற்றவாளியாக காண்பிக்க இயலாது. பாகிஸ்தான் தரம் தாழ்ந்து செயல்படுகிறது; அதன் இந்த செயல்பாடு இந்தியாவை எந்த வகையிலும் பாதிக்காது. நாம் உயரப் பறந்து கொண்டிருக்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன்னாள் அதிகாரி அனிஷ் கோயல் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், "பாகிஸ்தான், காஷ்மீர் பிரச்சனையை பொது சபை கூட்டத்தில் குறிப்பிடும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. எனினும், அதை விட, கலந்தாலோசிக்க முக்கியமான நிறைய விஷயங்கள் உள்ளதால், இம்முறை காஷ்மீர் பிரச்சனை மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை" எனக் கூறியுள்ளார்.

மேலும், அமெரிக்கப் பயணத்தை தொடங்குமுன், பிரதமர் பேசுகையில், "ஐக்கிய நாடுகளின் பொது சபையில் பேசுவதற்கு காஷ்மீர் அல்லாது, பருவநிலை மாற்றம், வறுமை ஒழிப்பு, தீவிரவாதம், பொருளாதாரம் போன்ற வேறு பல முக்கிய விஷயங்கள் உள்ளன. ஹூஸ்டனில் ட்ரம்ப் ஐ சந்திக்கவிருக்கும் நான் இந்திய அமெரிக்க வளர்ச்சியை குறித்தே கலந்தாலோசிக்கத் திட்டமிட்டுள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே, ஐக்கிய நாடுகளின் மாநாட்டில், அவர் காஷ்மீர் குறித்து பேச போவதில்லை எனத் தெரிகிறது.

"ஹௌடி மோடி" நிகழ்வுடன் தொடங்கவிருக்கும் பிரதமரின் அமெரிக்க பயணம், செப் 27., அன்று நடக்கவுள்ள ஐக்கிய நாடுகளின் பொது சபை மாநாட்டில் கலந்துக் கொள்வதுடன் முடிவடைய உள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close