ஷங்கர் படம் போன்ற பிரம்மாண்டம்... ஆளை அசத்தும் டாக்சிகம் தேசிய பூங்கா

  Soundarya Ravi   | Last Modified : 27 Oct, 2018 10:51 am

கோடை என்றால் உடனே ஏதோ ஒரு குளிர் பிரதேசத்திற்கு சென்று வருவது சலிப்பை ஏற்படுத்தவில்லையா? இந்த சம்மரில் காடு, சிறுத்தை, மான்களையெல்லாம் பார்க்க பயணிக்கலாமே..

அதற்கு சிறந்த ஆப்ஷன் ஜம்மூ காஷ்மீர் பகுதியில் இருக்கும் டாக்சிகம் தேசிய பூங்கா. ஏனெனில்  இந்த பூங்காவை ஒருமுறை வந்து பார்த்துவிட்டால் காடுகளின் அழகை அனுபவித்து விடலாம் என்று  கூறுகின்றனர் வனவிலங்கு ஆர்வலர்கள். 

ஶ்ரீநகரில் இருந்து 22 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது டாச்கிகம் தேசிய பூங்கா. இமயமலையில் அமைந்துள்ள இந்த பூங்கா 141 கிலோ மீட்டர் பரப்பளவுக் கொண்டது. 

இந்த இடம் தான் ஹாங்கல் எனப்படும் மிக அரியவகை காஷ்மீர் மான்களின் இருப்பிடம்.  

1910 ஆண்டு ஜம்மூ காஷ்மீர் மகாராஜா இந்த பகுதியில் உள்ள ஹர்வான் நீர்நிலைக்காக இந்த இடத்திற்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டார். இந்த நீர்நிலையில் இருந்து தான் ஶ்ரீநகர் பகுதிக்கு சுத்தமான நீர் கிடைக்கிறது. அதன் பின்னர் வந்த அரசுகள் இதனைத் தொடர்ந்து பாதுகாத்து வருகின்றனர். 1981ம் ஆண்டில் இது தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது. 

10 கிராமங்களின் தியாகம்:

இந்த பூங்கா தற்போது இருக்கும் இடத்தில் 10 கிராமங்கள் இருந்தனவாம். இந்த இடம் பூங்காவாக அறிவிக்கப்பட்ட பின் அந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு அவர்கள் மாறி உள்ளனர். அவர்களின் தியாகத்தை நினைப்படுத்தவே இந்த பூங்காவிற்கு டாக்சிகம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த பூங்காவில் 500க்கும் மேற்பட்ட மூலிகைகள், 50 வகையான மரங்கள் மற்றும் 20 வகையான புதர்கள் உள்ளன. காஷ்மீர் மான்களை தவிர்த்து கஸ்தூரி மான், சிறுத்தைகள், நீண்ட வால் கொண்ட சாம்பல் நிற குரங்குகள், சிறுத்தை பூனை, கருப்பு கரடி, மஞ்கள் கழுத்துக்கொண்ட கீரி உள்ளிட்ட அரிய வகை விலங்குகள் பாதுகாக்கப் படுகின்றன. மேலும் பல வகையான பறவைகளின் இருப்பிடமாகவும் இந்த பூங்கா திகழ்கிறது. 

இந்த பகுதி விலங்குகள் மட்டும் இன்றி அழகான இயற்கை காட்சிகளுக்கும் புகழ் பெற்றது. குளிர்காலத்தில் முழுவதுமாக பனி சூழ்ந்தும் மற்ற காலங்களில் பச்சை பசேலென பல அரிய வகை பூக்களுடன் ரம்யமான காட்சிக்கே அங்கு சென்று வரலாம். குறிப்பாக சங்கர் படங்களில் பாடல் காட்சிகளில் காணும் பச்சை வெளியில் நீல நிற பூக்கள் பூத்திருக்கும் அற்புதக்காட்சியை இங்கு காணலாம்.

எங்கு தங்கலாம்: 

முழு பூங்காவின் அழகையும் ஒரே நாளில் பார்த்து விட்டு வர முடியாது அல்லவா.. எனவே 2,3 நாட்கள் தங்கி ரசித்து பார்ப்பதே சிறந்ததாகும். ஆனால் இந்த பூங்காவிற்கு அருகில் தங்கும் வசதிகள் குறைவே. ஆனால் 22 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஶ்ரீநகரும் பெரிய சுற்றுலா தளம் என்பதால் அங்கு இருக்கும் ஓட்டல்களில் தங்கலாம். 

எப்போது சென்றால் நல்லா இருக்கும்: 

அனைத்து குளிர் பிரதேசங்களை போல இங்கும் கோடைக்கால விசிட் தான் நல்லது. ஏப்ரல் மாதம் முதல் அக்கோடபர் வரை சென்று வரலாம். 

இதை மறக்காதீங்க: 

டச்சிகம் பூங்காவில் ஜீப் சாவரி செல்வது வேற லெவல் அனுபவமாக இருக்கும். 

எப்படி செல்வது: 

ஜம்மூ காஷ்மீர் ரயில் நிலையம் இந்த பூங்காவிற்கு அருகில் உள்ளது. இங்கு சென்னையில் இருந்து ரயில்கள் செல்கின்றன. அங்கிருந்து டாக்சி அல்லது பஸ்களில் செல்லலாம். 

டெல்லி, மும்பை, இந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஶ்ரீநகருக்கு நேரடி விமான வசதி உள்ளது. சென்னையில் இருந்து டெல்லி, மும்பை சென்று அங்கிருந்து ஶ்ரீநகருக்கு செல்லலாம். ரயிலில் செல்வதாக இருந்தால், அதற்கே இரண்டு நாட்கள் ஆகிவிடும். 

மேலும் விவரங்களுக்கு: http://www.jktourism.org/dachigam-wildlife-sanctuary.html 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.