காதலுடன் கண்டு ரசிக்க முஸோரி போகலாம் வாங்க!

  Shalini Chandra Sekar   | Last Modified : 19 Apr, 2018 12:40 pm


உத்ரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்திலிருந்து 34 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது முஸோரி ஹில் ஸ்டேஷன். இமயமலையில் அடிவாரத்தில் அமைந்துள்ள, இந்த கோடை வாழிடம், மலைகளின் ராணி எனவும் அழைக்கப் படுகிறது. சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 6600 அடி உயரத்தில் அமைந்துள்ள முஸோரிக்கு, பல வகையான தாவரங்கள், உள்ளூர் விலங்கினங்கள் அதிக வசீகரத்தைக் கொடுக்கின்றன. வட-கிழக்கின் பனிமலைத் தொடர்கள், டூன் பள்ளத்தாக்குகள், தெற்கில் அமைந்துள்ள ஷிவாலிக் தொடர்கள் இந்த நகரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாகின்றன. வெறும் சுற்றுத்தலமாக மட்டுமல்லாமல், கல்வி மற்றும் வியாபாரத்திற்கும் முக்கியமான இடமாக முஸோரி நகரம் திகழ்கிறது. 

இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்) தேர்வில் வெற்றி பெருபவர்கள்  இங்குள்ள லால் பகதூர் சாஸ்திரி நேஷனல் அகாடமி ஆஃப் அட்மினிஸ்டேஷன் எனும் மையத்தில் தான் ஆட்சிப்பணி சம்பந்தமான பயிற்சிகளைப் பெறுவார்கள். 


எப்படி போவது? 

சென்னையிலிருந்து டேராடூன் போவதற்கு நிறைய ஃப்ளைட்டுகள் இருக்கின்றன. ஆனால் அவைகள் டெல்லியில் கொஞ்சம் தாமதித்துவிட்டு தான் டேராடூனுக்குக் கிளம்புகின்றன. குறைந்தது 5.30 மணி நேரத்திலிருந்து 8.30 மணி வரை ஆகும். டிக்கெட் ஒருவருக்கு குறைந்தப் பட்சம் 6500 ரூபாய். டேராடூனிலிருந்து ஒரு மணி நேர பயணத்தில் முஸோரியை அடைந்து விடலாம். 

சென்னை சென்ட்ரலில் இருந்து ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வியாழக்கிழமை காலை 9.45-க்கு தேராடூன் எக்ஸ்பிரஸ் கிளம்புகிறது. நான் ஏசி ஸ்லீப்பரில் 43 மணி நேர பயணத்துக்கு 825 ரூபாய் டிக்கெட் கட்டணம். 


பார்க்க வேண்டிய இடங்கள்?

0 ஒட்டகத்தின் முதுகு வடிவிலுள்ள 'ஒட்டக முதுகு சாலை', பீரங்கி மலை, இமயமலையின் தொன்மையான தேவாலயமான 'செயின்ட் மேரீஸ் சர்ச்', கெம்ப்டி ஃபால்ஸ் மற்றும் நிறைய பூக்கள் மற்றும் தாவரங்களைக் கொண்ட கம்பெனி தோட்டம். 

0 மேலும் அங்கிருக்கும் ஒரு பள்ளத்தாக்கின் பெயர் 'ஹேப்பி பள்ளத்தாக்கு'. இந்தப் பள்ளத்தாக்கில் ஒரு திபெத்தியன் (புத்தர்) கோவில் உள்ளது. இது தான் இந்தியாவில் முதன்முதலாக கட்டப்பட்ட திபெத்தியன் கோவில். இந்தக் கோவிலில் இருந்து இயற்கையைக் காண இரு கண்கள் போதாது. 

0 கெம்ப்டி நதியில் படகு சவாரி, மிஸ்ட் ஏரி, முனிசிபல் தோட்டம், முஸோரி ஏரி, சிஸ்டர்ஸ் லாட்ஜ், பாட்டா அருவி, ஜாரிபானி அருவி, மோஸ்ஸி அருவி என முஸோரியில் சுற்றிப் பார்க்க நிறைய இடங்கள் உள்ளன. 

0 தவிர, இங்குள்ள பார்க் எஸ்டேட்டில் 1830 ஆம் ஆண்டு முதல் 1843 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் பொது நில ஆய்வாளராக இருந்த சர் ஜார்ஜ் எவெரெஸ்டின் கட்டடம் மற்றும் சோதனைக்கூடம் ஆகியவற்றின் எஞ்சிய பகுதியைக் காணலாம். ஜார்ஜ் எவெரெஸ்டின் நினைவாகவே உலகின் உயரமான சிகரத்திற்கு எவெரெஸ்ட் என பெயர் வந்தது.

0 ஹிமாலயன் வேவர்ஸ், பெனோக் மலை காடை சரணாலயம், வான் சேத்னா கேந்த்ரா, கிளவுட் எண்ட் என கண்டு ரசிப்பதற்கு இன்னும் ஏராளமான இடங்கள் முஸோரியில் உள்ளன. 


எங்கு தங்குவது? 

ஹோட்டல் சன் & ஸ்னோ, பிரின்ஸ் ஹோட்டல், விதாந்தா, சிவா கான்டினென்டல், கிரிஸ்டல் பேலஸ், ட்ரீம் பேலஸ் என தங்குவதற்கு நூற்றுக்கணக்கான ஹோட்டல்கள் உள்ளன. விலை ஒரு நாளைக்கு ரூ 2000 முதல். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.