கோடைக்கால ஸ்பெஷல் வெகேஷனுக்கு ஸ்ரீநகர் 'தி பெஸ்ட்'

  நந்தினி   | Last Modified : 20 Apr, 2018 01:42 pm


ஸ்ரீநகர் மாவட்டம்:

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் மற்றும் கோடைகால தலைநகராக 'ஸ்ரீநகர்' அமைந்துள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில், இண்டஸ், தால் மற்றும் அஞ்சர் ஏரிகளின் துணியை கொண்ட ஜூலம் நதிக்கரையில் ஸ்ரீநகர் இடம் பெற்றுள்ளது. இயற்கை அழகு, தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் படகு வீடுகளுக்கு ஸ்ரீநகர் புகழ் பெற்றவை. இது தவிர பாரம்பரிய காஷ்மீரி கைவினைப்பொருட்கள் மற்றும் உலர்ந்த பழங்களுக்கும் இந்நகரம் பெயர் போனவை. இந்தியாவின் வடக்கு பகுதியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை கொண்ட நகரம் இதுவாகும். 

கல்ஹானா எழுதிய ராஜதரங்கிணி புத்தகத்தில், சிறி-நகராக இருந்த பெயர், பின்னர் சமஸ்கிருத வார்த்தைகளை கொண்டு ஸ்ரீநகர் என்று மாற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இயற்கை அழகுகளை தவிர வரலாற்றுச் சிறப்பு, மத முக்கியத்துவம் மற்றும் தொல்பொருள் சின்னங்கள் என பலவகை அம்சங்களையும் ஸ்ரீநகர் கொண்டுள்ளது. 


ஸ்ரீநகரின் சுற்றுலா தலங்கள்:

* ஜூலம் நதியின் இருபக்கங்களிலும் அமைந்திருக்கும் இந்நகரம் ஏரிகள் மற்றும் சதுப்பு நிலங்களை கொண்டது. தால், நிகீன், அஞ்சர், குஷல் சர், கில் சர், ஹோகர்சர் உள்ளிட்டவையும் இதில் அடங்கும். ஹோகர்சர் சதுப்பு நிலத்திற்கு குளிர்காலத்தில் சைபீரியா மற்றும் மத்திய ஆசியாவில் இருந்து பறவைகள் புலம்பெயரும். 

* கிழக்கு வெனிஸ், பூலோக சொர்க்கம் என்று அழைக்கப்படும் ஸ்ரீநகரில் அமைத்துள்ள ஏரிகளில் தால், அஞ்சர், நிகீன், வ்உலர், மனஸ்பால் ஆகியவை புகழ்பெற்ற சுற்றுலா தலங்களாக இருக்கிறது. இணையில்லாத இயற்கையழகும், சுற்றுசூழலும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கக் கூடியதாக உள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள இரண்டாவது பெரிய ஏரி தால். 'காஷ்மீர் கிரீடத்தில் இருக்கும் ஆபரணம்' என்றழைக்கப்படும் தால், இமயமலையின் பின்புலத்தில் அமைந்துள்ளது. இந்நகரத்தில் உள்ள ஏரிகள், படகு வீடுகள், சிக்காரா படகு சவாரிகளுக்கு மிகவும் புகழ்பெற்றது.  

* மொகாலாயர்கள் அமைத்த வண்ணமிகு மொகால் தோட்டங்களும் இங்கு இடம் பெற்றுள்ளன. ஷாலிமார், நிஷாத் பூங்கா, பரி மஹால் அரண்மனை, சாஷ்மா நீரூற்றுகளும் அங்கு புகழ் பெற்றவை. 1969ம் ஆண்டு இந்நகரத்தில் ஜவகர்லால் நேரு நினைவு பொட்டானிக்கல் தோட்டம் அமைக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீரின் மொகால் தோட்டங்களான இவை உலக பாரம்பரிய தலங்களாகும். 


* இது தவிர இந்திரா காந்தி துலிப் தோட்டமும் இங்கு உள்ளது. 90 ஏக்கர் தோட்டத்தில் 70 வகைகளில் துலிப் மலர்கள் பூக்கும் இடமாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 5ம் தேதி முதல் 15 நாட்களுக்கு இங்கு நடக்கும் துலிப் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய துலிப் மலர் கண்காட்சி இதுவாகும். காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் இத்திருவிழாவில் மக்கள் கலை நிகழ்ச்சியை கண்டு ரசிப்பதோடு, உள்ளூர் உணவுகளையும் விரும்பி சாப்பிடுவார்கள். அது மட்டுமில்லாமல், காஷ்மீரின் கைவினைப் பொருட்கள், கார்பெட், பஷ்மினா சால்வைகள், பாட்டினாலா கழுத்து பட்டைகள் மற்றும் ஜவுளிகள் அனைத்தையும் சுற்றுலா பயணிகள் விரும்பி வாங்குவர்.  

* இங்குள்ள டச்சிக்காம் விலங்குகள் சரணாலயமும் பிரபலமான சுற்றுலா தலமாகும். இது 1951ம் ஆண்டு தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது. ஹக்புல் என்னும் அரியவகை சிவப்பு மான்களை இங்கு காணலாம். சிறுத்தை புலிகள், கஸ்தூரி மான்கள் மற்றும் பலவகை புலம் பெயரும் விலங்குகளை இங்கு பார்க்கலாம். 

* ஸ்ரீநகரில் உணவு வகைகள் பெரும்பாலும் அரிசியை வைத்தே பரிமாறப்படும். காரசாரமாகவும் உணவுகள் இருக்கும். இங்கு தயாரிக்கப்படும் குங்குமப்பூ மிகுந்த உயர்தரம் வாய்ந்தவையாகவும், அதே நேரம் உயர்ந்த விலையையும் கொண்டவையாகவும் இருக்கும். உயரிய வாசனைக் கொண்ட இந்த குங்குமப்பூவை விவசாயிகளிடம் இருந்து நேரடியாகவே மக்கள் வாங்க முடியும். 


* ஸ்ரீநகரில் உள்ள முக்கிய வழிப்பாட்டு தலங்களில் ஹஸ்ரத்பால் தர்கா, ஜாமியா மசூதி, ஷா ஹமதான் மசூதி, சீக்கியர்களின் முக்டூம் குருத்துவாரா, ஜேஷ்டாதேவி கோயில் மற்றும் சங்கராச்சாரியர் கோயில்கள் உள்ளன. சங்கராச்சாரியர் அல்லது ஜ்யேஸ்டேஸ்வரா கோயில், கி.மு 200ம் நூற்றாண்டை கொண்டது. ஸ்ரீநகரில் சபர்வான் மலையில் அமைந்துள்ள இந்த கோயில், 1000 அடி உயரத்தை கொண்டிருக்கும். கடவுள் சிவனுக்கு இந்த கோயில் அர்பணிக்கப்பட்டுள்ளது. தால் ஏரியை பார்த்தபடி இந்த கோயில் அமைந்திருக்கும். 

* ட்ரெக்கிங், ஹைக்கிங் போன்ற சாகசங்களுக்கும் பெயர் போன சுற்றுலா தலம் இதுவாகும். ஸ்ரீரங்கரில் தொடங்கி அமர்நாத் குகைகளை நோக்கி செல்லும் மலையேற்றப் பாதை இங்கு சிறப்புடையதாகும். 

* இது தவிர, ஸ்ரீநகருக்கு 300கிமீ அருகில் உள்ள தோடா, பூஞ்ச், த்ராஸ், புல்வாமா, புத்காம் ஆகிய சுற்றுலா தலங்களை, வீக்எண்ட் என்ஜாய்மென்ட்டாக நாம் சுற்றி பார்க்க ஏற்ற இடங்கள்.


ஸ்ரீநகர் போக்குவரத்து: 

விமானம்: ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, மும்பை, டெல்லி, லெஹ், ஜம்மு, சண்டிகர், சிம்லா ஆகிய முக்கிய நகரங்களுக்கு தொடர்ச்சியான விமான சேவைகளை கொண்டுள்ளது. விமான நிலையம் நகரின் மனத்தில் இருந்து 14கிமீ தொலைவில் உள்ளது. 

ரயில்: ஸ்ரீநகருக்கு 290கிமீ தொலைவில் ஜம்மு ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம், ஜம்மு, லெஹ், சண்டிகர், டெல்லி ஆகிய முக்கிய இடங்களை இணைக்கும். தவிர, பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கும் ஜம்மு ரயில் நிலையம் இணைக்கப்பட்டுள்ளது. 


வானிலை: 

ஈரப்பதமான மிதவெப்ப மண்டல காலநிலையை (குளிர்காலம், கோடைகாலம்) கொண்டிருக்கும் ஸ்ரீநகர், பருவநிலை வருடம் முழுவதும் சுற்றுலாவுக்கு ஏற்ற இடமாகவே உள்ளது. குறைவான பனிப்பொழிவையே ஸ்ரீநகர் பெற்றிருக்கிறது. குளிர்காலத்தில், பகல் நேர வெப்பநிலை 2.5 °C ஆக இருக்கும். ஆனால் இரவில் மிகுந்த குளிர்ச்சியாக இருக்கும். மேலும், குளிர்காலத்தில் மிதமானது முதல் கடுமையான பனிப்பொழிவும் இருக்கும். கோடைகாலத்தில், குறிப்பாக ஜூலை மாதம் சராசரியான வெப்பம் இருக்கும். வருடாந்திர மழைப்பொழிவு சராசரி 720 மில்லிமீட்டர் வரை இருக்கும். வசந்த காலம் ஈரப்பதமாகவும், இலையுதிர் காலம் வறண்டும் இருக்கும்.


ஸ்ரீநகர் தங்குமிடம்: 

ஸ்ரீநகரில் உள்ள ஹோட்டல்கள் தங்குவதற்கான சிறந்த இடமாக இருக்கிறது. இயற்கை அழகை ரசித்தபடியாகவே ஹோட்டல் அமைந்திருக்கும். ஸ்ரீநகரில் கண்கவரும் இடங்களில் தான் ஹோட்டல் அமைக்கப்பட்டிருக்கும். சுற்றுலா பயணிகள் எளிதாகவும், மறக்க முடியாத அளவிற்கு தங்களது சுற்றுலாவை சிறந்த முறையில் செலவிடவும் அங்கிருக்கும் ஹோட்டல்கள் மிகச்சிறந்த அளவில் உதவியாக இருக்கும். 

ஏரி கரையோரம் இருக்கும் உணவகம் நம்மை இயற்கையை ரசித்தபடி உணவு உண்ண வைக்கும். இந்தியா, காஷ்மீரி, சீனா உணவுகளுக்கு அங்குள்ள தாவத் உணவகம் சிறப்புடையதாக இருக்கும். மேலும், ஸ்டெர்லிங், தாஜ் தால், லலித் கிராண்ட் ஹோட்டல்களும் ஸ்ரீநகரில் சிறப்பு. ரூ.2000 முதல் ஹோட்டல் கட்டணம் துவங்கும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.