கோடையில் குளுகுளு பனிபிரதேசம் - காஷ்மீரின் குல்மார்க்!

  SRK   | Last Modified : 20 Apr, 2018 12:39 pm


பூமியில் உள்ள சொர்க்கம் காஷ்மீர் என்று சிலர் கூறுவதுண்டு. ஆனால், காஷ்மீரின் சொர்க்கம் எது தெரியுமா? குல்மார்க்!

வெயில் காலத்தில், பச்சைப் பசேலென மரங்களும், நூற்றுக்கணக்கான அழகான பூக்கள், வனங்கள் என எழில் கொஞ்சும், குல்மார்க், குளிர்காலத்தில் முழுக்க முழுக்க பனிக்குள் மூழ்கிவிடுகிறது. அதனாலேயே உலகின் தலைசிறந்த சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாக பார்க்கப்படுகிறாள் இந்த மலையரசி.


பார்க்க வேண்டிய பகுதிகள்...


கொண்டோலா

குல்மார்க்கில் பார்த்து ரசிக்க வேண்டிய மிக முக்கியமானது கொண்டோலா தான். ரோப் கார் மூலம் சுற்றுலா பயணிகளை, சுமார் 8500 அடி உயரத்தில் உள்ள குல்மார்க் ரிசார்ட்டில் இருந்து, சுமார் 12,300 அடி உயரத்தில் உள்ள கொங்டூரி மலைக்கு கொண்டு செல்கிறது இந்த கொண்டோலா பயணம். இரண்டு பிரிவுகளாக இந்த கொண்டோலா பயணம் இயங்குகிறது. 

சுற்றிலும் மரங்கள், மலைகள் சூழ கொண்டோலாவில் வானில் மிதந்தபடி குல்மார்க்கின் அழகை ரசிப்பது, ஈடுஇணை இல்லாத ஒரு அனுபவம்.


பனிச்சறுக்கு விளையாட்டு

இந்தியாவிலேயே பனிச்சறுக்குக்கு மிகசிறந்த இடம் குல்மார்க் தான். மற்ற காலங்களில் புல்தரையுடன் இருக்கும் குல்மார்க் கோல்ப் கோர்ஸ், குளிர்காலத்தில், உலகின் டாப் ஸ்கீயிங் பகுதியாக மாறிவிடும். சுற்றியுள்ள மலைகள் அனைத்துமே பனிச்சறுக்குக்கு ஏற்ற இடமாகிவிடும். வெளிநாடுகளில் இருந்து கூட நூற்றுக்கணக்கானோர் இங்கு பனிச்சறுக்கு விளையாட வருவார்கள். சிறியவர்கள் முதல் பெரியர்வர்கள் வரை எல்லோரும் ஆர்வமுடன் பனிச்சறுக்கு கற்றுக்கொள்வதை பார்க்கலாம். புதிதாக பனிச்சறுக்கு விளையாடுபவர்களுக்கு சிறிய குன்றுகள் உண்டு; கற்றுக்கொடுக்க பல பயிற்சியாளர்களும் உண்டு. 

பனிச்சறுக்கில் தேர்ந்தவராக இருந்தால், உயரமான அபர்வாத் மலைக்கு சென்று சறுக்கி விளையாடலாம். ஸ்கீயிங், ஸ்னோபோர்டிங், ஸ்லெட்ஜிங் போன்ற அனைத்து பனிச்சறுக்கு விளையாட்டுகளும் இங்கு உண்டு.


அல்பாதர் ஏரி

குல்மார்க்கை சொர்க்கம் என்று அழைப்பதற்கு முக்கியமான காரணம் இந்த அல்பாதர் ஏரி. அபர்வாத் மலையின் அடிவாரத்தில் இருக்கும் இந்த ஏரி, வெயில் காலம் வரும் வரை முழுக்க முழுக்க உறைந்து போயிருக்கும். ஏரியிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் ட்ரெக்கிங் செல்லலாம். மே மாதம் முடியும் வரை கூட, இது உறைந்து போயிருக்குமாம் 


குல்மார்க் உயிர்கோளப் பகுதி (Biosphere Reserve)

கண்ணைக்கவரும் வனங்களும், அரிதிலும் அரிய வன விலங்குகளையும் கொண்டது குல்மார்க் உயிர்கோளப் பகுதி. கடல்மட்டத்தில் இருந்து 7800 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த வனத்தில், சிகப்பு நரி, இமாலய மான் போன்ற பல விலங்குகளை கண்டு களிக்கலாம். இயற்கை ஆர்வலர்களுக்கும், புகைப்பட ஆர்வலர்களுக்கும், இந்த இடம் ஒரு புதையல் போல. 


புனித தலங்கள்

குல்மார்குக்கு அருகே அமைந்துள்ள பாபா ரேஷி கோவில், 500 ஆண்டுகள் பழமையானது. மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கோவிலில், முகலாய கால கட்டுமான கலைகளின் உச்சத்தை பார்க்க முடியும். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இங்கு சென்று வழிபட்டால், குழந்தை பிறக்கும் என்று நம்பப்படுகிறது. இங்குள்ள மஹாராணி கோவிலும் மிகப்பிரபலம். சிகப்பு நிற கோபுரத்தை கொண்ட இந்த கோவில், நீண்ட தூரத்தில் இருந்து பார்த்தாலும் தனித்து தெரியும். இங்குள்ள செயின்ட் மேரிஸ் தேவாலயமும் மிக பிரபலம். இங்கு ட்ரெக்கிங் மூலமாக தான் செல்ல முடியும். 


எப்படி செல்வது?

விமானம் - தலைநகர் ஸ்ரீநகருக்கு விமானம் மூலமாக சென்று, அங்கிருந்து டேக்சி மூலம் குல்மார்க் செல்லலாம். ஸ்ரீநகரில் இருந்து வெறும் 50 கிமீ தான்.

ரயில் - ஜம்மு தாவி மற்றும் உத்தம்பூர் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களுக்கு தினம் ரயில் உண்டு. அங்கிருந்து சுமார் 300 கிமீ தூரத்தில் உள்ள குல்மார்குக்கு டேக்சி மூலம் செல்லலாம்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.