பாவங்கள் தீர்க்கும் கேதார்நாத்

  சிவா   | Last Modified : 23 Apr, 2018 05:44 pm


இந்துக்களின் மிக முக்கியமான புனித நகரம் கேதார்நாத். இது  வட இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது. இங்கு சிவபெருமன் ஜோதிர்லிங்கமாக காட்சிதந்து நமக்கு அருள்பாலிக்கிறார். இமயமலைத் தொடரில் மிக அழகிய இடத்தில் கேதார்நாத் அமைந்துள்ளது.

உயர்ந்த சிகரங்களும் புனிதமிக்க மந்தாகினி நதியும் நம்மை பரவசத்தில் ஆழ்த்துகின்றன. கேதர்நாத், கடல் மட்டத்தில் இருந்து 11,755 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஆதி சங்கராச்சாரியாரால் 8ம் நூற்றாண்டில் இக்கோவில் புனரமைக்கப்பட்டது. அவரது சமாதியும் இங்கு அமைந்திருப்பதுதான் இந்துக்களின் மிக முக்கியமான புனித தளமாக கேதர்நாத்தை உயர்த்தியுள்ளது.

தல வரலாறு: 

சத்திய யுகத்தில் வாழ்ந்த அரசர் கேதாரின் நினைவாக இந்நகரம் கேதார்நாத் என்ற பெயரை பெற்றது. மேலும், அவரது மகள் விருந்தா, லக்ஷ்மியின் அவதாரம் என்பதால் கேதார்நாத் நிலம் விருந்தவன் என்ற பெயரை பெற்றுள்ளது என்றும் கூறப்படுகிறது. 


மகாபாரத போரில் தங்கள் உறவினர்களையே கொன்றதால், அந்த பாவத்தை போக்க பஞ்ச பாண்டவர்கள் காசிக்கு புனித யாத்திரையை மேற்கொண்டனர். ஆனால், சிவபெருமான் அங்கிருந்து கயிலாயம் சென்றதால், அவர்கள் தங்களது யாத்திரையை கயிலாத்தை நோக்கி மாற்றினர். ஹரித்வார் வழியாக இமயத்தை நெருங்கும் போது, அவர்கள் சிவபெருமானை பார்த்துள்ளனர். ஆனால் சிவபெருமான் அங்கிருந்து மறைந்துவிட்டார். தற்போது அந்த இடம் குப்தகாசி என்ற பெயரில் உள்ளது. சிவபெருமான் மறைந்த போதிலும் அவரை பார்த்தே ஆகவேண்டும் என்று பாண்டவர்கள் குப்தகாசியில் இருந்து இமயமலை பள்ளத்தாக்கில் இருக்கும் கௌரிகுண்ட் இடத்தை அடைந்தனர். 

அப்போது அங்கு காட்டெருமையை கண்டனர். அதன் மீது பீமன் தனது காதாயுதத்தை வைத்து தாக்க முயன்றான். அதில் இருந்து காட்டெருமை தப்பித்தது. இருந்தாலும் எருமையின் முகம் தாக்கப்பட்டது. இதனால் பூமியின் ஒரு பிளவில் எருமை மறைந்து கொண்டது. அந்த சமயம் பீமன் அதன் வாலை இழுக்க, நேபாளம் வரை பிளவு ஏற்பட்டது. நேபாளத்தில் அந்த இடம் தோலேஸ்வர் மகாதேவ் என்று அழைக்கப்படுகிறது. காட்டெருமை இருந்த இடத்தில் ஜோதிர்லிங்கம் உண்டானது. அந்த ஒளியில் இருந்து சிவபெருமான் தோன்றி பாண்டவர்களின் பாவத்தை போக்கினார். 


அம்முக்கோண வடிவ ஜோதிர்லிங்கம் கேதார்நாத்தின் கருவறையில் இருக்கிறது. கோயிலை சுற்று பஞ்ச பாண்டவர்களின் அடையாளங்கள் பல அமைக்கப்பட்டுள்ளன. காட்டெருமையிடம் பீமன் சண்டையிட்டதன் முடிவில், பீமன் சிவபெருமானுக்கு நெய்யால் அபிஷேகம் செய்ததால், இன்றும் ஜோதிர்லிங்கதுக்கு நெய்யால் அபிஷேகம் நடந்து வருகிறது. 

உலக மக்கள் நன்மைக்காக எப்போதும் இங்கிருந்து அருள் புரிய வேண்டும் என்று நர-நாராயணன்கள் சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டதால், சிவபெருமான் ஜோதிர்லிங்க வடிவத்தில் இங்கு திகழ்ந்து வருவதாகவும், அவரை கேதாரேஸ்வரர் என்று போற்றப்படுவதாகவும் புராணம் கூறுகிறது. 

கோயில் அமைப்பு: 

கோயில் காலை 6 மணி முதல் மதியம் 3 மணி வரை திறந்திருக்கும். கோயிலின் நுழைவாயிலில் பாண்டவர்கள், கிருஷ்ணர், சிவபெருமானின் வாகனமான நந்தி தேவர், காவலாளியான வீரபத்திரர், திரௌபதி போன்றோரது சிலைகளை பார்க்கலாம். இக்கோயிலுக்கு அருகில் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்கு திருமணம் நடந்த கோயிலும் இடம் பெற்றுள்ளது. பஞ்ச பாண்டவர்கள் கட்டிய கோவிலும் இங்கு உள்ளதாக கூறப்படுகிறது. ஆதி சங்கரர் இக்கோயிலோடு சேர்த்து பல கோயில்களை உத்தரகாண்டில் புனரமைத்தார். கேதார்நாத்தில் ஆதி சங்கரர் மகாசமாதி அடைந்தார். அவர் சமாதி அடைந்த இடம் கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது.


கோயில் இருப்பிடம்: 

இந்துக்களின் புனித நதியாக திகழும் கங்கையின் கரையில் அமைந்திருக்கும் முக்கிய நகரங்களும் ஒன்றான ரிஷிகேஷில் இருந்து 223 கிமீ தொலைவில் கேதார்நாத் அமைந்துள்ளது. மந்தாகினி நதி அருகே இருக்கும் கோயில், கடல்மட்டத்தில் இருந்து உயர்ந்து காணப்படும். கோயிலை சுற்றி இமயமலையும், மேய்ச்சல் நிலங்களும் உள்ளன. புனித யாத்திரை மற்றும் மலையேற்றப் பயிற்சிகளுக்கு நம்மை ஈர்க்கக்கூடிய இடமாகவும் இது அமைந்துள்ளது. சாலை வழியில் இக்கோயிலை நேரடியாக அணுக முடியாது. கௌரிகுண்ட் என்ற இடத்தில் இருந்து 14கிமீ தொலைவில் மலை ஏறியே இக்கோயிலை சென்றடைய முடியும். அதனால் பஸ், கார், வேன் போன்ற வாகனங்கள் கௌரிகுண்ட் வரை மட்டுமே செல்லும்.

கேதார்நாத் கோயிலுக்கு அருகில் பைரவா கோயிலும் அங்கு சிறப்பு வாய்ந்தவை. மேலும், கேதார் மாசிப், குப்தகாசி, கேதார்நாத் மலை, வாசுகி தால் ஏரி, மந்தாகினி ஆறு, சரோபாரி தால் ஏரி ஆகிய இடங்களையும் கண்டு ரசிக்கலாம். 


வானிலை: 

குளிர்காலத்தில் ஏற்படும் கடும் பனிபொழிவால், கேதார்நாத் கோயில் ஆறு மாதத்திற்கு (நவம்பர் முதல் ஏப்ரல் வரை) மூடப்பட்டுவிடும். கோயிலை மூடுவதற்கு முன்னர் கோயிலுக்குள் மிகப்பெரிய நெய் விளக்கு ஏற்றப்படும். கோயிலை மீண்டும் திறக்கும் போதும் அந்த விளக்கு அணையாமல் எறிந்து கொண்டு இருக்கும். அதை காண ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு படையெடுப்பார்கள். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.