ஊட்டியில் இதை மிஸ் பண்ணிடாதீங்க...

  Shalini   | Last Modified : 10 May, 2018 04:33 am


தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தின் வடமேற்கில், கர்நாடகம் மற்றும் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது முதுமலை தேசிய பூங்கா. தொடக்கத்தில் 60 சதுர கிலோ மீட்டராக இருந்த இந்தப் பூங்கா பின்பு 295-ஆக விரிவுப் படுத்தப் பட்டு தற்போது 321 ச.கி.மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. உலக பாரம்பரிய சின்னங்களுள் ஒன்றாக இந்த முதுமலை தேசிய பூங்காவை யுனெஸ்கோவால் அறிவிக்கப் பட்டுள்ளது. இதன் நீட்சியாக 5.3 கிலோ மீட்டர் தொலைவில் பந்திப்பூர் தேசியப் பூங்கா அமைந்துள்ளது. 

1974 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த பூங்காவில் புலிகள் பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இது கர்நாடகம் மாநிலத்தில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் இப்பகுதி மைசூர் அரசரின் தனிப்பட்ட வேட்டைக் களமாக இருந்தது. 

எப்படி செல்வது? 


ஊட்டியிலிருந்து 46 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முதுமலையை காரில் சென்றால் ஒன்றரை மணி நேரத்தில் அடையலாம். ஊட்டியிலிருந்து மைசூர் செல்லும் பேருந்துகளும் இந்த வழியில் தான் போகின்றன. முதுமலையிலிருந்து 15 நிமிடத்தில் பந்திப்பூரை அடைந்து விடலாம்.  

என்னவெல்லாம் பார்க்கலாம்? 

மசினகுடி, கார்குடி, முதுமலை, நெலக்கோட்டை, தெப்பக்காடு ஆகியப் பகுதிகளை உள்ளடக்கியது முதுமலை தேசியப் பூங்கா. 

இங்கு யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி, மான், பறக்கும் அணில், பெரிய இந்திய சிவப்பு அணில், காட்டு நாய், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, நரி, காட்டு முயல், முதலை, கீரி, கழுதைப்புலி, மலைப்பாம்பு போன்ற பல்வேறு வகையான விலங்குகளும், மயில், பல்வேறு வகையான காட்டுக்கோழிகள், புறா, கழுகு, பருந்து, வல்லூறு போன்ற பல்வேறு வகையான பறவைகளும் உள்ளன. (பந்திப்பூரிலும் இவைகளைக் காணலாம்)

பார்வையாளர்களுக்கு எது சரியான நேரம்? 


பிப்ரவரியிலிருந்து ஜூன் வரையான நேரம் இந்த முதுமலை பூங்காவை 'விசிட்' செய்வதற்கு சிறப்பான நேரமாகும். அணைகளில் வந்து விலங்குகள் தண்ணீர் குடிப்பதை சாதாரணமாக இந்த நேரத்தில் காண முடியும். ஃபோட்டோகிராஃபியில் ஆர்வமுள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த நேரம். ஜூன் முதன் ஆகஸ்ட் வரையான காலத்தில் இந்த பயணத்தை தவிர்த்து விடுவது நலம். 

அக்டோபரில் இருந்து மே வரையான காலத்தில் பந்திப்பூரை 'விசிட்' செய்யலாம். ஜூலை முதல் செப்டம்பர் வரை இங்கு போகாமல் இருப்பது நல்லது. 

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தினமும் இந்த இரண்டு பூங்காக்களும் திறந்திருக்கும். வேன், ஜீப், யானை சவாரிகள் மக்கள் கூட்டம் வாகனங்கள், காலநிலை ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். 

ஊட்டியில் வெறும் பொட்டானிக்கல் கார்டனையும், தொட்டப்பெட்டா மலையையும் பார்த்து சலித்துப் போனவர்களுக்கு நிச்சயம் ஒரு புதுவித அனுபவத்தை இந்த பூங்காக்கள் தரும்!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.