காளியை வணங்குங்கள் ....வாழ்க்கை என்னும் அழகிய கவி புனைய வைப்பாள் –கொல்கத்தா செல்வோம் வாருங்கள்

  கோமதி   | Last Modified : 04 May, 2018 06:05 pm

காளி என்றதுமே அவளின் கோபமுக உருவம் தான் நம்மில் பலருக்கும் நினைவிற்கு வரும்.ஆனால் , அக்கிரமங்களையும், தீமைகளையும் அழிக்க சாந்தம் உதவாதே ...... நம் அன்னை கூட நம்மிடம் அன்பாக கொஞ்சிப் பேசும் போது அமைதியாகவும் கருணையாகவும் இருக்கிறாள்.அதே சமயம் நாம் தவறு செய்யும் போது அவளே கோபமாக மாறுவதும் உண்டு தானே. உலகத்தையே ரட்சிக்கும் லோக மாதாவும் அப்படித்தான். தன் பிள்ளைகளிடம் கனிவாக இருப்பவள், தீமை என்று வரும் போது பொங்கி எழுந்து தனது கோர முகத்தை காட்டச் செய்வாள். இந்தியாவில் பல இடங்களில் காளிக் கோவில்கள் இருந்தாலும் ,கல்கத்தாவில் அமைந்துள்ள காளிகாட் காளி கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றது.

எங்கே இருக்கிறது காளிகாட் காளி கோயில்? - மேற்கு வங்கத் தலைநகரான கொல்கத்தாவின் காளிகாட் என்னும் பகுதியில் அமைந்துள்ளது இக்கோவில். கொல்கத்தாவிற்கு எல்லா முக்கிய நகரங்களில் இருந்தும் பேருந்து,விமான போக்குவரத்து உண்டு. இது அம்மனின் 51 சக்தி பீடங்களுள் ஒன்று. இந்தக் கோவிலில் தேவி உக்ர சக்தியாக திகழ்கிறாள். பாகீரதி நதிக்கரையில் காளிகாட் கோயில் அமைந்துள்ளது. ஹௌரா மற்றும் மெட்ரோ நிலையத்தில் இருந்தும் காளிகாட் செல்லலாம். காளிகட்டா என்ற பெயரிலிருந்து தான் கல்கத்தா வந்ததாகக் கூறுகிறார்கள். பல நூல்களில் காலேஸ்வரம் என்று குறிப்பிடப்பட்டுள்ள இந்த இடத்தில் தான் பார்வதி தேவியின் வலது காலின் விரல்கள் விழுந்ததாகக் கூறப்படுகிறது. காளிகாட்டில் ஓங்காரமாக கொலு வீற்றிருக்கும் மகாசக்தியை காளி என்றும், க்ஷேத்ரபாலகரை நகுலேஷ்வரர் என்றும் மக்கள் அழைக்கின்றனர். கோவிலுக்குச் செல்ல சிறந்த நேரம்: அதிகாலை அல்லது பிற்பகல் நேரமாகும். காலை 5:00 மணி முதல் நண்பகல் - 2:00 மணி வரை. மாலை 5:00 மணி முதல் இரவு 10:30 மணி வரை (எல்லா நாட்களும்).

காளியின் தோற்றம் - பெண் என்பவள் சமயம் வரும் போது புயலாகவும் மாற வேண்டும் என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறாள் அன்னை. தனது இடது மேற்கரத்தில் மகாபத்ராத்மஜன் எனும் கத்தி, கீழ்க்கையில் ரத்தம் சொட்டும் அசுரனின் தலை, வலது மேற்கரத்தில் அபய முத்திரை, கீழ்க்கரத்தில் வரமுத்திரை என தாங்கி நிற்கிறாள். கருமை நிறத்தில் மண்டையோடு மாலையணிந்து அனல் கக்கும் விழிகளுடன் பகைவர்களை நடுங்க செய்யும் வண்ணம் அமைந்திருக்கிறது அவளின் தோற்றம். அசுரனை வதம் செய்து முடித்து ஆவேசத்துடன் திரும்பி வந்துகொண்டிருந்த தேவியின் வேகத்தையும் கோபத்தையும் யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. அவளைத் தடுக்க ஈசன் காளி வரும்வழியில் குறுக்காக படுத்தார். வேகமாய் வந்த காளி, தன் காலில் சிவன் இடறியதைக் கண்டதும் தன் தவறை உணர்ந்து நாக்கைக் கடிக்க அந்நிலையே காளியின் உருவமானது என்கிறது புராணம்.

ஈசனைப் போன்றே இவளும் சம்ஹார நாயகி என்பதால்,முக்கண்களோடு காட்சியளிக்கிறாள். சிவப்புப் பட்டுடுத்தி வெளியில் தொங்கும் தங்கநாக்குடன் கோர வடிவுடன் காட்சியளித்தாலும் இவள் தன்னை நாடி வரும் பக்தர்களின் வாயில் இருந்து வரும் காளி மா ... என்ற வார்த்தைகளுக்கு பனி போல் உருகுபவள். அருளை வாரி வழங்குபவள். ஆகவே மடியில் கனம் இல்லாதவர்கள் இவளைக் கண்டு பயப்படத் தேவையில்லை. காளிதேவியின் கழுத்தில் காணப்படும் 51 கபால மாலைகள், ஸப்தகோடி மகாமந்திரங்களுக்கும் பிரதானமான 51 மாத்ருகா அக்ஷரங்கள் என்பது நம்பிக்கை. வில்லின் வடிவம் போன்று தோற்றமளிக்கும் இந்த ஆலயத்தில், மூன்று மூலைகளிலும் மும்மூர்த்திகள் அலங்கரிக்க, நடுவில் பிரதான நாயகியாக காளி எழுந்தருளியுள்ளாள்

தல வரலாறு - கங்கா சாகர் எனப்படும் கங்கை, வங்கக் கடலுடன் கலக்கும் முகத்துவாரத்தில் கபில முனிவர் வசித்து வந்தார். ஒருமுறை சில காபாலிகர்கள் கங்கா சாகரில் புனித நீராடி கபில முனிவரை தரிசிக்கச் சென்றனர்.அப்போது வழியில் விரல்கள் வடிவில் ஓர் அதிசயப் பாறை காளியின் சாயலில் தென்பட்டது. காபாலிகர்கள், நரபலியை மனதில் கொண்டு அந்தப் பாறையை அங்கேயே ஸ்தாபித்து தங்களது முறைப்படி வழிபட்டனர். அந்தச் சிலையே இன்றைய காளிகாட் காளி அம்மன் என்கிறது தல வரலாறு. இக்கோயிலுக்கு இன்னொரு தலவரலாறும் உண்டு. ஆத்மராம் என்கிற தேவி உபாசகன்,மாலை நேரத்தில் பாகீரதிக் கரையில் ஜெபம் செய்யும்போது கண்களைப் பறிக்கும் ஒளிக்கதிர் ஒன்று திடீரென்று தோன்றியது. மறுநாள் காலையில் ஒளிவந்த இடத்தை அவன் வந்து பார்த்தபோது, தெளிவான பாகீரதி ஆற்றின் தண்ணீருக்கு அடியில், மனிதக் கால்விரல்கள்போல் வடிக்கப்பட்ட சிறு கல் ஒன்றைக் கண்டான். அந்த விரல்கள் தாட்சாயணியின் வலக்கால் விரல்கள் என்று உணர்ந்து, அதை எடுத்து வந்து அதற்கு பூஜையும் செய்யத் தொடங்கினான். அந்தப் புனித இடமே காளி தேவியின் மகா சக்தி பீடமாயிற்று. கல் கிடந்த இடத்தின் அருகிலேயே ஒரு சிவலிங்கமும் காணப்பட, சிவலிங்கத்துக்கு நகுலேஷ்வர பைரவர் என்று நாமம் சூட்டி காளி சிலையின் அருகிலேயே அமைத்து வழிபட்டான். விரல்கள் போல் காணப்பட்ட அந்தக் கல், ஒரு வெள்ளிப் பேழைக்குள் வைக்கப்பட்டு இப்போதைய காளி சிலையின் அடியில் வடகிழக்கு மூலையில் வைக்கப்பட்டுள்ளது. மஹாகவி காளிதாசரையும் கவி புனைய வைத்தவள் அன்னை காளி தான். காளியை தொழுவோம்,ஏற்றம் பெறுவோம்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.