பஞ்சர் ஆன இந்திய பொருளாதாரம்- ப.சிதம்பரம்

  ஐஸ்வர்யா   | Last Modified : 04 Jun, 2018 12:21 pm

p-chidambaram-criticism-on-central-govt

இந்திய பொருளாதாரம் 3 டயர்களும் பஞ்சரான கார் போன்று உள்ளதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

மும்பை அருகே தானேவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ப.சிதம்பரம்,  “பொருளாதாரத்தை பொருத்தவரை தனியார் முதலீடு, தனியார் நுகர்வு, ஏற்றுமதி மற்றும் அரசின் செலவினங்கள் ஆகிய நான்கும் ஒரு காரின் 4 டயர்களைப் போன்றது. ஆனால் இந்தியாவில் தற்போது 3 டயர்கள் பஞ்சராகி உள்ளது. ஒரு சக்கரத்தில் தடுமாறும் இந்திய பொருளாதாரத்தை வைத்துக்கொண்டு செய்வதறியாது திகைக்கும் மத்திய அரசு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்களின் மீது வரியை அதிகரித்து சாமன்ய மக்களை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிவருகிறது. பிற நாடுகளில் எல்லாம் ஜிஎஸ்டி ஒரே வரியாக இருக்கும் நிலையில், இந்தியாவில் மட்டும் 5 நிலைகளில் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. மேலும் மத்திய பாஜக அரசு முத்ரா திட்டத்தின்கீழ் கொடுக்கும் ரூ. 43 ஆயிரத்தை வைத்துக்கொண்டு பகோடா வியாபாரம் மட்டுமே போடமுடியும், வேற எந்த தொழிலும் செய்ய முடியாது.

தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் ஏற்றுமதி 315 பில்லியன் டாலர் என்ற அளவில் இருந்தது. கடந்த ஆண்டு அது, 303 பில்லியன் டாலராகத்தான் இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டு அது 300 பில்லியன் டாலரைக் கூடத் தொடவில்லை.  இதன்மூலம் ஏற்றுமதி மூலமாக நமக்கு லாபம் கிடைக்கவில்லை என்பது தெரிகிறது.

இந்த அரசு வந்ததற்குப் பிறகு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு அவர்கள் இந்த நாட்டின் இரண்டாம் நிலை குடி மக்கள் என மறைமுகமாக உணர்த்தப்பட்டனர். அவர்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பது தொடங்கி, ஆன்டி ரோமியோ ஸ்குவாடு என சமூகத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது வரை பல்வேறு விஷயங்கள் அவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.  என்.டி.ஏ ஆட்சியில் ஏற்பட்டுள்ள சமூக தாக்கங்களை ஒப்பிடுகையில், அதனால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார சீரழிவுகளை நம்மால் சரி செய்ய முடியும்" என்றார்.

பல்வேறு முறைகேடு வழக்குகளில் ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டப்பட்டு, கைது நடவடிக்கை தவிர்க்க முன் ஜாமீன் பெற்றுள்ள நிலையில் இப்படி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close