உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமண வீட்டில், சாப்பாட்டுத் தட்டுக்கு ஏற்பட்ட சண்டையில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.
உத்தரப் பிரதேசத்தின் பலாலியா நகரில் உள்ள விக்ரம்புரா பகுதியில் சனிக்கிழமை இரவு திருமண நிகழ்ச்சி நடந்தது. அப்போது, உணவு விருந்து பரிமாறும்போது, பலருக்கு சாப்பாட்டுத்தட்டு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அப்போது திருமண வீட்டில் இரு வீட்டாரும் சாப்பாட்டுத் தட்டுக்காக வாக்குவாதம் செய்துள்ளனர். இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதில், திருமண வீடே கலவரம் பூண்டது.
இதில் 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்கையில், ஒருவர் வழியிலேயே உயிரிழந்தார். 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து அந்த நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் நகு யாதவ் கூறும்போது, ''விக்ரம்புரா பகுதியில் சனிக்கிழமை இரவு திருமண நிகழ்ச்சி நடந்தது. அப்போது திருமண வீட்டாருக்கும், விருந்தினர்களுக்கும் உணவு பரிமாறப்பட்டது.
ஆனால், நேரம் செல்ல செல்லக் கூட்டம் அதிகமாகவே விருந்தினர்கள் பலருக்கு சாப்பிடுவதற்கு தட்டு இல்லை. இது குறித்து திருமண வீட்டில் இருந்த இருபிரிவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் திடீரென கைகலப்பாக மாறி, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அதனால், திருமண வீட்டுக்கு வந்தவர்கள் அங்கிருந்து நகரத் தொடங்கினார்கள், அங்கிருந்த ஒருவர் போலீஸுக்கு தகவல் அளித்தார்.
அதன்பேரில் அங்கு நாங்கள் சென்றபோது, அடிதடியில் 5 பேர் காயமடைந்து இருந்தனர். அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கையில், விஷால் (20) என்ற இளைஞர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மீதம் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக திருமணவீட்டார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றார்.
சாப்பாடுத் தட்டுக்காக ஏற்பட்ட பேச்சுவார்த்தை மோதலில் சென்று முடிய, திருமண வீடே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.