கேரளாவுக்கு ரூ.700 கோடி நிதி போலியான தகவல்... ஏமாற்றியது அரபு நாடா..? பினராயி விஜயனா..?

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 24 Aug, 2018 04:24 pm
rs-700-crore-aid-from-uae-for-kerala-flood-relief

வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு காரணமாக கேரளாவில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவிற்கு தோள் கொடுக்கும் வகையில் பல மாநில அரசுகளும், பொதுமக்களும் இயன்றளவு நிதியை அளித்து வருகின்றனர். அந்த வகையில் கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.700 கோடி வழங்க ஐக்கிய அரசு எமிரேட்  விரும்புவதாக கேரள முதல்வர் தெரிவித்தார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வருவதற்கு முன்பாகவே, எமிரேட் அரசுக்கு கேரளா முதல்வரும், எதிர்கட்சி தலைவர்களும் நன்றி தெரிவித்து வருகின்றனர். 

உடனே, எமிரேட்டை தூக்கிவைத்து கொண்டாடி பல பதிவுகள் வெளியாகின. மத்திய அரசு கொடுத்த முதல்கட்ட நிதியை விமர்சித்தும் மீம்ஸ் பரப்பப்பட்டது. மேலும், இதுபோன்ற இயற்கை சீற்றங்களை இந்தியாவே சமாளிக்கும் வகையில் சட்ட விதிகள் உள்ளன. இதனால், வெளிநாட்டில் இருந்து வரும் நிதி உதவியை பெற முடியாது என்றும் மோடி அரசு முட்டுக்கட்டை போடுவதாகவும் தகவல்கள் வேகமாக பரவின.

இந்த நிதியைப்பெற  மத்திய அரசு தடுப்பதாகவும், இது கேரளாவுக்கு எதிரான செயல். இது மோடியின் அப்பட்டமான பழிவாங்கும் அரசியல்’’ என கேரள அமைச்சர்களும், சில அரசியல் கட்சி பிரமுகர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். ஒட்டு மொத்தத்தில் கேரளாவுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவது போன்ற தோற்றத்தை உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், வெள்ள நிவாரணத்திற்காக கேரளத்திற்கு எமிரேட் ரூ.700 கோடி அளிக்க முன் வந்ததாக கூறப்படும் தகவல்கள் உண்மை இல்லை எனத் தெரிய வந்துள்ளது. இது கேரள அரசு மீது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

இதனையடுத்து ’கேரளாவிற்கு வெள்ள நிவாரண நிதியாக ஐக்கிய அரபு அமீரக நாடுகள் வழங்க முன்வந்ததாக கூறப்படுவது காக்கை குருவி கதையா? கேரள முதலமைச்சர் முட்டாளாக்கப்பட்டாரா? இந்த குறும்பு விளையாட்டை நடத்தியது யார்? துயரத்தில் இப்படியொரு பொய்யான தகவலைக்கூற மனசாட்சி உறுத்தவில்லையா?  இந்தச் செய்தியை கேரள முதலமைச்சர் பிரனாயி விஜயன் வேண்டும் என்றே உலவ விடுகிறாரா?  அல்லது உதவுவதாக ஐக்கிய அமீரக நாடுகள் போலியான செய்தியை பரப்புகின்றனவா? என்கிற கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர் கேரள மாநில மக்கள்.

 

கடந்த 21- ம்தேதி செய்தியாளர்களைச் சந்தித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ‘’ஐக்கிய அரபு அமீர நாடு கேரள வெள்ள நிவாரணத்திற்காக ரூ.700 கோடி  வழங்க முன் வந்துள்ளது. அதற்கு நன்றி தெரிவிக்கிறேன்’’ எனக்கூறினார். இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து வரும் நிவாரண நிதியை ஏற்பதில்லை என்கிற கொள்கையை கூறி அந்த நிதியை பெற எதிர்ப்புத் தெரிவிப்பதாக இடது சாரிகளும், மோடி எதிர்ப்பாளர்களும் கதை கட்டினர். ஆனால் இவ்வளவு இழப்பீடு இருந்தும் மத்திய அரசு அந்த நிதியை மறுத்து ரூ 600 கோடி ரூபாயை மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளதாக சர்ச்சையை கிளப்பினர்.

ஆனால், உண்மையில் இதுவரை, கேரளாவுக்கு ரூ .700 கோடி நிவாரணம் அளிக்க இருப்பதாக ஐக்கிய அரபு எமிரேட் அரசுகள் இதுவரை அதிகாரப்பூர்வமாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ அளிக்கவில்லை. செய்தியாளர்கள் சந்திப்பின்போது கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மிகத் தெளிவாக, ''கேரளாவுக்கு நிதி உதவி அளிக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஷெரீப் கலீஃபா பின் ஸாயீத் அல் நஹயன் விரும்புவதாக, ஐக்கிய அரபு அமீரக நாட்டில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த தொழிலளதிபர் எம்.ஏ.யூசுப் அலி என்னிடம் கூறினார்’’ என தெரிவித்து இருந்தார். அவ்வளவே...

அதற்குள்ளாக அந்த நிதியை பெறுவதில் உள்ள சிக்கல் பற்றி பிரச்னை எழுந்து, கடைசியில் மத்திய அரசுக்கு எதிரான மனநிலையை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போது உள்ளுக்குள் உறங்கிக் கொண்டு இருந்த பூனை வெளியே வந்திருக்கிறது.

ஆம், நிதி உதவி செய்ய எமிரேட் தயாராக உள்ளது என கேரள முதலமைச்சரிடம் பேசிய யூசுப் அலியின் செய்தித் தொடர்பாளர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில்,‘’கேரளாவிற்கு வெள்ள நிவாரண உதவி தொகை அளிப்பது தொடர்பாக இதுவரை யூசுப் அலி யாரிடமும் கூறவில்லை. அவர் யாரையும் தொடர்பு கொள்ளவும் இல்லை. இது தொடர்பாக அவரது பெயரை மீண்டும் பயன்படுத்தி சர்ச்சையை ஏற்படுத்தும் செய்தி நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என கூறியுள்ளார். அதேநேரத்தில், இந்த தகவலை வெளியிட் பினராயி விஜயன் பற்றி ஏதும் சொல்லவில்லை. 

இதன் மூலம் கேரளாவிற்கு எமிரேட் ரூ.700 கோடி வழங்குவதாக தெரிவிக்கவே இல்லை என்பதும், இது தொடர்பாக யாரையும் தொடர்பு கொள்ளவும் இல்லை என்ற உண்மையும் வெளிப்பட்டுள்ளது. லூலூ குழுமத்தைச் சேர்ந்த யூசுப் அலி முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக ஏற்கெனவே ஐந்து கோடி ரூபாயை வழங்கியுள்ளார் என்பது மட்டுமே உண்மை.

’’இந்த விஷயத்தில் யூசுப் அலி கூறிய வேறொன்றை பினராயி விஜயன் தவறாக புரிந்து கொண்டாரா? அவர் கூறியதை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு செயலற்ற முதல்வராக இருக்கிறாரா பினராயி விஜயன்? அல்லது இந்த விஷயத்தில் வேண்டுமென்ற மத்திய அரசு மீது பினராயி விஜயன் சர்ச்சையை ஏற்படுத்துகிறாரா? எழுத்துப்பூர்வமாக இல்லாத தகவலை எப்படி ஒரு முதலமைச்சர் மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டார்?  என்று பல கேள்விகளை தற்போது ஊடகங்கள் எழுப்பியுள்ளன.

இன்றைக்கு இணையத்தில், உங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக பல போலி மெயில்கள் வருகின்றன. இதை நம்பி பலரும் தங்களிடமிருந்த கொஞ்சநஞ்ச பணத்தையும் இழக்கின்றனர். கேரள முதலமைச்சரின் அறிவிப்பு கிட்டத்தட்ட நைஜீரியா பண மோசடி அறிவிப்பு போலவே அமைந்துவிட்டதாக கேரள மக்கள் கருதுகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close