ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக கொடுங்கள்: பினராயி விஜயன்

  சுஜாதா   | Last Modified : 27 Aug, 2018 09:36 am

pinarayi-vijayan-asks-all-malayalis-to-donate-one-month-s-salary

வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க ஏராளமான நிதி தேவைப்படுகிறது. ஆதலால் கேரளாவில் வாழும் மக்களும், வெளிநாடுகளில் வாழும் கேரள மக்களும் தங்களின் ஒருமாத ஊதியத்தை மாநிலத்தின் மேம்பாட்டுக்காக அளித்து உதவ வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவால் பேரழிவு ஏற்பட்டது. மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்ட மக்கள் மழைக்குப் பலியாகியுள்ளனர், 36பேரைக் காணவில்லை. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கினார்கள்.
 
தற்போது மழை நின்று  விட்டதால் மாநிலம் முழுவதும் மறுசீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கேரள வெள்ள நிவாரணத்திற்கு உலக நாடுகள், இந்தியா முழுவதுமுள்ள மாநிலங்கள் என பல்வேறு தரப்புகளில் இருந்து நிவாரண உதவிகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், வெள்ள நீர் வடிந்துவருவதால், மக்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று பராமரிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

போர்க்கால அடிப்படையில் நடந்து வரும் இந்த பணிகளையும், மழை, வெள்ளத்தில் சிக்கியவர்கள் தங்க வைக்கப்பட்டு இருக்கும் முகாம்களையும் முதலமைச்சர்  பினராயி விஜயன் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:– "கேரளாவில் மழை குறைந்து, வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் மக்கள் தங்கள் வாழ்விடங்களுக்குத் திரும்பி வருகின்றனர். இன்னும் 1,465 நிவாரண முகாம்களில் 4.62 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சுத்தம் செய்து தரப்பட்டுள்ளன.

வெள்ளத்தில் சேதமடைந்த பகுதிகளையும், பாலங்கள், சாலைகள் கட்டமைப்பு வசதிகளை மீண்டும் மேம்படுத்தித் தர ஏராளமான நிதி தேவைப்படுகிறது. மாநிலத்தின் மறுக்கட்டமைப்பாக கேரளாவில் வாழும் மக்களும், வெளிநாடுகளில் வாழும் கேரள மக்களும் தங்களின் ஒருமாத ஊதியத்தை மாநிலத்தின் மேம்பாட்டுக்காக அளிக்க வேண்டும்.

நம்முடைய வலிமையை கண்டறிவதுஅவசியம். அனைத்து மக்களாலும் ஒரு மாத ஊதியத்தை அளிப்பது கடினம், ஆதலால், கேரளாவில் வசிக்கும் மக்களும், வெளிநாட்டில் வசிப்பவர்களும் ஒவ்வொரு மாதத்தில் 3 நாட்கள் ஊதியத்தை மாநிலத்தின் மறுகட்டமைப்புக்காக அளிக்கலாம்’’ எனத் தெரிவித்தார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close