எஃகு அமைச்சகம் முதல் முறையாக இரண்டாம் நிலை எஃகு துறைக்கான விருதுகளை டெல்லியில் இன்று (13.09.2018) நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கவுள்ளது.
இந்த விருதுகள் இரண்டாம் நிலை எஃகு துறையை ஊக்குவிப்பதற்காக நிறுவப்பட்டுள்ளன. தேசிய பொருளாதாரத்திற்கும் வேலைவாய்ப்பு பெருக்கத்திற்கும் இந்தத் துறை ஆற்றும் முக்கிய பங்கு பணியை பாராட்டி இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
தற்போதைய வளர்ச்சி அடிப்படையில் எஃகு துறையில் இந்தியா, சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2017 தேசிய எஃகு கொள்கையின்படி, ஆண்டு உற்பத்தி திறனை 2030 ஆம் ஆண்டு வாக்கில், 30 கோடி டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2017-18 ஆம் ஆண்டின் உற்பத்தித் திறன் ஏற்கனவே 13 கோடியே 79 லட்சம் டன் அளவை எட்டியுள்ளது.
இரண்டாம் நிலை எஃகு துறையில் பஞ்சு இரும்பு பிரிவுகள், மின்பொறி உலைகள், இணைப்புகள் இல்லா உலோகப் பிரித்தெடுப்பு ஆலைகள், மறு உற்பத்தி ஆலைகள், குளிர்முறை உற்பத்தி ஆலைகள், கலாய் இணைப்பு ஆலைகள், இரும்பு ஒயர் உற்பத்தி பிரிவுகள், வெள்ளீய பூச்சு உற்பத்தி ஆலைகள் போன்ற தொழில்கள் அடங்கும். இந்தப் பிரிவுகள் அனைத்தும் மதிப்புக் கூட்டப்பட்ட எஃகு உற்பத்தி பொருட்கள் தேவையை சந்திக்க உதவுகின்றன.
2017-18-ல் இந்தியா 10 கோடியே 31 லட்சம் டன் உற்பத்தித் திறனை அடைந்துள்ளது. 2016-17-ல் இது 9 கோடியே 79 லட்சமாக இருந்தது. நாட்டின் தனிநபர் எஃகு நுகர்வுத்திறனும் தொடர்ந்து உயர்ந்து இன்றைய நிலையில் நபர் ஒருவருக்கு 69 கிலோ என்ற நிலையை எட்டியுள்ளது.
உலக கச்சா எஃகு உற்பத்தி 2017-ல் 5.3% வளர்ச்சியை அடைந்தது.
உலக மொத்த எஃகு உற்பத்தியில் 6% பங்கைப் பெற்றுள்ள இந்தியா, சீனா, ஜப்பானுக்கு அடுத்தபடியாக 3-ம் இடத்தில் உள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எஃகு தொழில்துறை 2% பங்களிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.