பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மத்திய-மாநில அரசுகளுக்கு பயன்: அருண் ஜேட்லி

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2018 08:19 am
jaitley-defends-notebandi-lists-benefits-to-economy

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்ததுடன், மத்திய-மாநில அரசுகளுக்கு மிகப்பெரும் பயன் கிடைத்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். 

பணமதிப்பிழப்பு அமல்படுத்தப்பட்டு நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதன் பயன்களை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டதாகவும், இதனால் பணமதிப்பு நீக்க நடவடிக்கை முற்றிலும் தோல்வியடைந்திருப்பதாகவும் தவறான விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

அதிக அளவிலான பணத்தை கைப்பற்றுவது, இந்த நடவடிக்கையின் அங்கம் அல்ல. மாறாக அவற்றை முறைப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தில் சேர்த்து வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் முக்கிய அம்சம் ஆகும். குறிப்பாக பணப்பரிமாற்றத்தை டிஜிட்டல் பரிமாற்றமாக மாற்றுவது முக்கியமாகும்.

அந்தவகையில் பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டதால் பணப்பரிமாற்றம் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டு டிஜிட்டல் பரிமாற்றங்கள் அதிகரித்து இருக்கிறது. இத்தகைய முறைப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தால் வரிசெலுத்துவோரின் எண்ணிக்கையும் பெருகி உள்ளது.

அதன்படி வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 64 லட்சத்தில்  இருந்து 1.20 கோடியாக உயர்ந்து இருக்கிறது. சரக்கு மற்றும் சேவைகளின் உண்மையான நுகர்வுத்தன்மை அதிகரித்து, வரித்தளம் தற்போது அதிகரித்து இருக்கிறது. இதன் மூலம் மறைமுக வரியும் அதிகரித்து உள்ளது. இது மத்திய-மாநில அரசுகளுக்கு மிகுந்த பயனை அளித்து இருக்கிறது. 

குறைவான வரி செலுத்துவோருக்கு ரூ.97 ஆயிரம் கோடி மற்றும் ஜி.எஸ்.டி. பங்களிப்போருக்கு ரூ.80 ஆயிரம் கோடி என ஆண்டுதோறும் வரிச்சலுகை வழங்கப்பட்ட பிறகும், வரி வசூல் அதிகரித்துள்ளது. இதைப்போல நேரடி மற்றும் மறைமுக வரி விகிதங்கள் குறைக்கப்பட்ட பிறகும் வரி வசூல் அதிகரித்து இருக்கிறது. 

இந்த தொகையை உள்கட்டமைப்பு மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்காகவும், பல்வேறு சமூக துறைகளிலுமே மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. இப்படி பொருளாதாரம் முறைப்படுத்தப்பட்டதால் 13 கோடி தொழில் முனைவோர் முத்ரா கடன்களை பெற்றுள்ளனர் . 7-வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்டதுடன், ஒரு பதவி-ஒரே ஓய்வூதிய திட்டமும் இறுதியில் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.  இவ்வாறு அருண் ஜேட்லி  தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close