ஆறு விமான நிலைய பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  சுஜாதா   | Last Modified : 10 Nov, 2018 01:48 am

government-to-lease-six-airports-cabinet-approves-plan

*   இந்திய விமான நிலைய ஆணையத்தின் கீழ் உள்ள ஆமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ, குவஹாத்தி, திருவனந்தபுரம், மங்களூரு ஆகிய 6 விமான நிலையங்களின் செயல்பாடுகள், மேலாண்மை மற்றும் மேம்பாட்டுப் பணிகளை அரசு-தனியார் ஒத்துழைப்பு  அமைப்பிடம் ஒப்படைக்க கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது அரசு தனியார் ஒத்துழைப்பு மதிப்பீடு குழு மூலம் ஒப்படைக்கப்படும்.

*   அரசு தனியார் ஒத்துழைப்பு மதிப்பீட்டுக் குழு எடுக்கும் முடிவுகளில் பிரச்சினைகள் எதுவும் வந்தால், அது குறித்து முடிவுசெய்ய செயலாளர்கள் கொண்ட வல்லுநர் குழு அமைத்தல். நித்தி ஆயோக் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி தலைமையிலான இந்தக் குழுவில், விமானப் போக்குவரத்து அமைச்சக செயலாளர், பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர், செலவின துறை செயலாளர் ஆகியோர் இடம்பெறுவார்கள்.

பலன்கள்:

*கட்டமைப்புத் திட்டங்களில் அரசு-தனியார் ஒத்துழைப்பின் மூலம், சிறப்பான சேவைகளை வழங்குதல், நிபுணத்துவம், தொழில்முறை ஆகியவை இருக்கும். மேலும், பொதுத்துறைக்கு தேவையான முதலீடுகளைப் பெற முடியும்.

*விமான நிலைய கட்டமைப்புத் திட்டங்களில் அரசு – தனியார் ஒத்துழைப்பை அனுமதிப்பதன் மூலம், விமான நிலையங்களில் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு கிடைக்கும். மேலும், திறன்மிகு சேவைகள், விமானப் பயணிகளுக்கு உரிய நேரத்தில் சேவை கிடைக்கும். எந்தவொரு முதலீடும் செய்யாமல், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துக்கு வருவாய் வழிகள் உருவாகும். ஹைதராபாத், பெங்களூருவில் கிரீன்பீல்டு விமான நிலையங்கள் உருவாக்கப்படும். தற்போதைய நிலையில், தில்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி விமான நிலையங்கள் அரசு-தனியார் ஒத்துழைப்பில் நிர்வகிக்கப்படுகின்றன.

*இந்தியாவில் அரசு-தனியார் ஒத்துழைப்பில் நிர்வகிக்கப்படும் விமான நிலையங்கள், விமான நிலைய சேவை தரம் குறித்த சர்வதேச விமான நிலையங்கள் கவுன்சிலின் மதிப்பீட்டின்படி, பல்வேறு பிரிவுகளிலும் முதல் 5 இடங்களில் உள்ளன.

*இந்த அரசு-தனியார் ஒத்துழைப்பின் மூலம், உலகத் தரம் வாய்ந்த விமான நிலையங்கள் அமைய உதவுவதுடன், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துக்கு வருவாயை அதிகரிப்பதற்கும், விமான நிலையங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தவும் உதவுகிறது. மேலும், நாட்டின் மற்ற பகுதிகளிலும் விமான வழிகாட்டி கட்டமைப்பை ஏற்படுத்த உதவுகிறது.

பின்னணி:

இந்தியாவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு தனியார்மயமாக்கப்பட்ட 5 விமான நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது சர்வதேச விமான நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அரசு-தனியார் ஒத்துழைப்பு முறையை அமல்படுத்துவதன் மூலம், விமான நிலையங்கள் துறைக்கு வெளிநாட்டு நேரடி முதலீட்டை பெறுவதற்கு உடனடி வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

இதன் காரணமாக, 6 விமான நிலையங்களை முதல்கட்டமாக மேம்படுத்துதல், கையாளுதல் மற்றும் மேலாண்மைப் பணிகளை தனியார்-அரசு ஒத்துழைப்பில் விட முடிவுசெய்யப்பட்டுள்ளது. இது இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துக்கு வருவாயை அதிகரிக்கச் செய்வதுடன், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் அதுதொடர்பான கட்டமைப்பு போன்றவற்றின் மூலம், பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை அதிகரிக்கச் செய்யும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.