உருவாகுமா அயோத்தியில் அமைதி கோயில் ? (பகுதி-2)

  பாரதி பித்தன்   | Last Modified : 10 Nov, 2018 07:44 pm

ram-temple-at-ayodhya

உருவாகுமா அயோத்தியில் அமைதி கோயில் ? (பகுதி-1

காங்கிரஸ், இந்து மதம், ராமர் ஆகியவை இந்தியாவை ஒன்றாக இணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உச்சரிப்பு வேறுபாடு கொண்ட ஒரே பெயர் ராமர் மட்டும் தான். அந்த ராமன் பிறந்த மண்ணில் அவனுக்கு கோயில் கட்டத்தான் எத்தனை நுாற்றாண்டுகளாக போராட வேண்டியிருக்கிறது. ராமர் கோயில் கட்டுவதற்கு பக்தி மட்டும் தான் காரணம் என்றால் உள்ளமே கோயில் ஊன் உடம்பே ஆலயம் என்று நினைக்கின்ற இந்து எந்த இடத்திலும் அதை கட்டுவான். அவன் வணங்கும் இறைவனும் இந்த இடத்தில் தான் இருப்பேன் என அடம்பிடிக்கமாட்டார்.  பிடிச்சா பிளையார் பிடிக்காட்டா விட்டால் சாணி. ஆனால் ராமர் கோயில் என்பது இந்த நாட்டின் கவுரவம். அடிமைதளத்தில் இருந்து வெளியேறி விட்டோம் என்று ஓங்கி உலகிற்கு சொல்லும் தகவல். இதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றால் ராமர் கோயிலின் உண்மை வரலாற்றை உணர்ந்து கொள்வது அவசியம்.

ராமன் இந்நாட்டின் லட்சிய புருஷன். அவனே இந்த நாட்டின் காவலன் இந்த எண்ணத்தில் ராமன் புகழை பரப்பும் வகையில் 89 கறுப்பு நிற கல்தூண்கள் மீது கடந்த 2100 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர் விக்கிரமாதித்யன் சரயு நதிக்கரையில் மிகப் பெரிய கோயில் எழுப்புகிறாரார்.  சரயு நதியில் ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் காரணமாக அவ்வப்போது ராமர்கோயில் புதுபிக்கப்படுகிறது. பாபர் காலத்தில் இடிக்கப்பட்ட ராமர்கோயில் கார்வால் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது என வல்லுனர்கள் கூறுகின்றனர். அந்த ராமர் கோயிலைத்தான் இந்த நாட்டின் மீது படையெடுத்த பாபரின் போர்ப்படை தளபதி மீர்பாகி 1528ம் ஆண்டு இடித்து தள்ளுகிறார். இதை தடுத்து இந்துக்கள் ஆவேசமாக போர் புரிகின்றனர். இந்த போர் 15 நாட்கள் நடக்கிறது. இதில் 1லட்சத்து 76 ஆயிரம் இந்துக்கள் பலியாகிறார்கள். இதன் முடிவில் வலுக்கட்டாயமாக கோயில் பாதி இடிக்கப்பட்டு மசூதி போன்று வெளிப்புறம் மாற்றப்படுகிறது.

1859ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் அயோத்தியில் இரு மத்தினரும் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. உட்புறம் முஸ்லீம்கள் தொழவும், வெளியே இந்துக்கள் வழிபடவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.  இரு வழிபாட்டையும் பிரிக்கும் வகையில் சுவர் எழுப்பப்படுகிறது. இந்த சுவர் 1934ல் ஏற்பட்ட கலவரத்தின் போது இடிக்கப்படுகிறது. கடந்த 1528 முதல் 1949 வரை ராமர் கோயிலை மீட்க 76 போர்கள் நடந்தன. குருகோவிந்த சிங், மகாராணி ரான்குன்வர் உட்பட பலர் இந்த போராட்டங்களை தலையேற்று நடத்தினர்.

பிரதமராக நேரு இருந்த காலத்தில்  1949ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி அந்த கோயிலில் பாலராமன் உருவம் சுயம்புவாக தோன்றியது. இதை இந்துக்கள் தான் வைத்தனர் என்று முஸ்லீம்கள் எதிர்த்தனர்.

இதைத் தொடர்ந்து ஏற்றபட்ட கலவரத்தில் இருந்து  சட்டம் ஒழுங்கை பராமாரிக்க ஸ்ரீபிரியாதத் ராம் கோயிலின் பொறுப்பாளராக நியமிக்கபட்டார். அவர் கோயிலின் கதவை பூட்ட உத்தரவிட்டார். அர்ச்சகர் மட்டும் சென்று வர ஒரு சிறு வழி ஏற்படுத்தப்பட்டது. பூட்டிய கதவிற்கு வெளியே பக்தர்கள் நாமசங்கீர்தனம் பாடிவந்தனர். அந்த இடம் சர்ச்சைக்குரிய இடமாக அறிவிக்கப்பட்டது.

1950ம் ஆண்டில் ராமர் சிலையை அகற்றக் கூடாது என பைசாபாத் நீதிமன்றத்தில்,கோபால் சிங் விஷாத் வழக்கு தொடர்ந்தார். சுந்திரத்திற்கு பின்னர் அயோத்தி தொடர்பாக தொடரப்பட்ட முதல் வழக்கு இது. இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த காலத்திலேயே 1959ம் ஆண்டு ராமர் கோயில் இடத்திற்கு உரிமை கோரி பைசாபாத் கோர்ட்டில் நிர்மோகி அகாரா வழக்கு தொடர்ந்தது. இதே போல பல அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. 1961ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி உபி வக்ப் சன்னி மத்திய வாரியம், எட்டு ஷன்னி முஸ்லீம்கள் இணைந்து சர்ச்சைக்குறிய இடத்திற்கு உரிமை கோரி  பைசாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதைத் தொடர்ந்து கோயிலை திறக்க சொல்லி பல ஆண்டுகள் போராட்டம் நடந்தது. 1983ம் ஆண்டு மார்ச் மாதம் உபியில் துறவிகள் மாநாடு நடந்தது. இதில் மேற்கு உபியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் தாவ் தயாள் கண்ணா என்பவர் அயோத்தி, மதுரா, காசி தளங்களை மீட்க அறைகூவல் விடுத்தார். இது போன்று ராமன் என்று பெயர் ஒலித்த இடங்களில் எல்லாம் அயோத்தியின் நிலை உறுத்திக் கொண்டே இருந்தது.

சாதுக்கள் மட்டும் ஈடுபட்ட இந்த போராட்டத்தில் விஷ்வ இந்து பரிஷத் களம் இறங்கியது. 1984ம் ஆண்டு அனைத்து பிரிவு இந்து சன்யாசிகளையும் ஒருங்கிணைத்து அயோத்தியை மீட்க  ஆலோசனை கூட்டத்தை விஎச்பி ஏற்பாடு செய்தது. அதில் முதலில் ராமர் கோயிலை மீட்போம், பின்னர்  நாடுமுழுவதும் அயோத்தி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி கோயில் கதவை திறப்போம் என முடிவு செய்யப்பட்டது.

அதன் பேரில் விஎச்பி சார்பில் ராமர் ஜானகி ரதயாத்திரையை பீகார் மாநிலத்தில் சீதாமார்ஹியில் தொடங்கி அயோத்தி வழியாக டில்லிக்கு செல்லும் வகையில் தொங்கப்பட்டது. ஆனால் இந்த யாத்திரை பாதியில் நிறுத்தப்பட்டது. கோயிலின் பூட்டை திறக்க வலியுறுத்தி ஓராண்டு கழித்து யாத்திரை மீண்டும் தொடர்ந்தது. இதில் ஏற்பட்ட எழுச்சி காரணமாக பைசராபாத் மாவட்ட நீதிபதி 1–2–1986ம் ஆண்டு கோயிலின் பூட்டை திறக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ராமர் கோயிலின் மாதிரி உருவானது. பின்னர் 1989ம் ஆண்டு பிரயாகையில் நடந்த கும்பமேளாவின் போது விஎச்பி அமைப்பு ஏற்பாடு செய்த சாதுக்கள் மாநாட்டில்  நாட்டின் அனைத்து கோயில்களிலும் ராமர் வழிபாடு நடத்த முடிவு  செய்யப்பட்டது.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருந்து ஸ்ரீராமர் நாமம் எழுதப்பட்ட 275,000 செங்கல்கள் 6 கோடி பேரிடம் இருந்து பெறப்பட்டு 1989ம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் அயோத்தி வந்து சேர்ந்தது. 1989 நவம்பர் 9ம் தேதி பீகாரை சேர்ந்த தலீத் சகோரர்கள் காமேஸ்வர், சவ்பால் அடிக்கல் நாட்டினர். இதற்கு அப்போதைய காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் முதல்வராக இருந்த திவாரி அனுமதி அளித்தார். இதே காலகட்டத்தில் உபி அரசு அயோத்தி தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடிக்க வேண்டும் என மனு செய்தது. இந்து இயக்கங்களை போலவே பாபர் மசூதி கமிட்டியை இஸ்லாமியர்கள் உருவாக்கினர்.

1987ம் ஆண்டு மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த அதனைத்து மனுக்களையும் வாபஸ் பெற்ற உபி அரசு ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யவே, 2 ஆண்டுகள் கழித்து சர்ச்சைக்குரிய இடம் முழுவதையும் கோயிலாக அறிவிக்க வேண்டும் என பக்தர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இது தொடர்பாக பைசாபாத் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த 4 வழக்குகளும் அகலாபாத் ஐகோர்ட் 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்சிற்கு மாற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து 1990ம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் தேதி சாதுக்கள் கரசேவைக்கு அழைப்பு விடுத்தனர். அந்த அழைப்பை அனைத்து இந்துக்களும் பெறும் வகையில் ஒவ்வொரு இல்லத்திற்கும் ராம ஜோதி சென்றது. அந்த ஜோதியைக் கொண்டு அந்த ஆண்டு அனைவரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். 25–19–1990ம் ஆண்டு பாஜ தலைவர் அத்வானி ராமர் ரதயாத்திரையில் வலம் வந்து மக்களிடம் ஆதரவு திரட்டினார். அதன் அடிப்படையில் மீண்டும் கரசேவைக்கு சாதுக்கள் அழைப்பு விடுத்தனர்.

சாதுக்களில் அழைப்பின் படி லட்சக்கணக்கான கரசேவகர்கள் 30–10–1990ம் ஆண்டு அயோத்தியில் உள்ளே புகுந்தனர். அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த அப்போதைய உபி முதல்வர் முலாம்சிங் யாதவ் உத்தரவிட்டார். இதில் இறந்தவர்கள் எண்ணிக்கை இது வரையில் தெரியவில்லை. பலரின் உடல்கள் வனப்பகுதிகளிலும், ஆறுகளிலும் இழுவிடப்பட்டு மறைக்கப்பட்டன. அதையும் மீறி சில கரசேவகர்கள் பாபர் மசூதியின் உச்சியில் ஏறி காவிக் கொடியை பறக்கவிட்டனர்.  .இதனால் கலவர சூழ்நிலை உருவானதும் பிரதமர் சந்திரசேகர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது.

1991ம் ஆண்டு மசூதி மற்றும் சர்ச்சைக்குரிய இடத்தின் 2.77 ஏக்கர் நிலத்தை உ.பி அரசு கைப்பற்றியது. அதை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கில் அரசு இடத்தை வைத்துக் கொள்ளலாம் ஆனால் அதில் எவ்விதமான கட்டுமானப்பணியையும் மேற்கொள்ள கூடாது என கோர்ட் உத்தரவிட்டது. இந்த நிலையில் உபியில் தேர்தல் வர பாஜ ஆட்சியை பிடித்து கல்யாண்சிங் முதல்வரானர்.

அதன்பின்னர் ராமர் பாதுகை நாடுமுழுவதும் வலம் வந்தது. இதே  காலகட்டத்தில் மீண்டும் கரசேவைக்கு அழைப்பு வரவே 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி கரசேவகர்கள் அங்கிருந்த சர்ச்சைக்குரிய கட்டத்தை இடித்து, தற்காலிக வழிபாட்டிற்கான ஏற்பாட்டை செய்தனர். இதனால் பாஜ ஆட்சி செய்த 4 மாநில அரசுகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டன. அத்வானி, உமாபாரதி உட்பட பலர் மீது வழக்கு தொடரப்பட்டது.

1994ம் ஆண்டு விசாரணை நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை கட்டுமானம், வழிபாடு நடத்த கூடாது என  சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. தொடர்ந்து 1996ம் ஆண்டு மசூதி இடிப்பு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த காலகட்டத்தில் வாஜ்பாய் பிரதமராக பொறுப்பேற்றார். 2001ம் ஆண்டு ராமர் கோயில் கட்டப்படும் என்று விஎச்பி அறிவித்தது. கடந்த 2002  அன்று அயோத்தி தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காண சத்ருகன் சிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டு பேச்சு வார்த்தை நடந்தும் பலன் இல்லை.

2002ம் ஆண்டு  உ.பி தேர்தலில் பாஜ ஆட்சிக்கு வந்தால் ராமர்கோயில் கட்டப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. கோயில் கட்டுமானப்பணிகளை தொடங்க 2002ம் ஆண்டு மார்ச்15ம் தேதியை விஎச்பி கொடுவாக விதித்தது. இதற்கான ஏற்பாடுகள் நடந்த போது நாடுமுழுவதும் கலவரம் வெடித்தது.  2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி  கோத்ராவில் ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது. அயோத்தியில் இருந்து திரும்பிய பக்தர்கள் 59  பேர் உயிருடன் எரிக்கப்பட்டனர். இதன் எதிரொலியாக நாடு முழுவதும் கலவரம் வெடித்தது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அயோத்தியில் சர்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்று முடி செய்ய ஐகோர்ட்டில் 3 நீதிபதிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ராமர்கோயில் இருந்ததற்கான ஆதாரம் திரட்ட தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி அவர்கள் செயல்பட்டு மசூதி இருந்த இடத்தில்  ராமர் கோயில் இருந்ததற்கான ஆதாரம் இருந்ததாக ஆகஸ்ட் மாதம் கோர்ட்டில் ஆவணங்கள் தாக்கல் செய்தனர்.

அதே ஆண்டு செப்டம்பர் மாதம் பாபர் மசூதி வழக்கில் 7 தலைவர்களுக்கு தொர்பு இருப்பதாக அறிவித்த கோர்ட் அத்வானியை விடுவித்தது. அவரோ 2004ம் ஆண்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று அறிவிக்கவே, கோர்ட் அத்வானி தொடர்பான தன் முடிவை பரிசீலனை செய்வதாக அறிவித்தது.

2005ம் ஆண்டு ஜூலை மாதம் வெடி பொருட்கள் அடங்கிய ஜீப் சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள சுற்றுச்சுவரில் மோதி விபத்து ஏற்படுத்தப்பட்டது. இதில் 6 பேரை பாதுகாப்பு போலீசார் சுட்டுக் கொன்றனர். 2009ம் ஆண்டு ஜுலை மாதம் பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் 17 ஆண்டுகள் கழித்து அறிக்கையை மத்திய அரசிடம் ஒப்படைத்தது.

2010ம் ஆண்டு செப்.30 அன்று அலகாபாத் ஐகோர்ட் சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்று தீர்ப்பளித்து. அதில் சர்ச்சைக்குரிய இடத்தை 3 பிரிவாக பிரித்து ஷன்னி முஸ்லீம்கள், நிர்மோகி அகாரா, ராம்லீலா அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்சில் பெரும்பான்மை நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதை எதிர்த்து 13 அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இதில் ஷியா மத்திய முஸ்லீம்கள் வாரியம் சர்ச்சைக்குறிய இடத்தில் ராமர் கோயில் கட்டிக்கொள்வதை ஏற்றுக் கொள்வதாகவும், மசூதியை சிறிது தள்ளி கட்டித்தர வேண்டும் என்றும் மனுதாக்கல் செய்தது. ஆனால் அதை ஷன்னி முஸ்லீம் அமைப்பு ஏற்காமல் தங்கள் கருத்தை மட்டுமே கேட்க வேண்டும் என கோர்ட்டில் மனுத்தாக்கால் செய்தது.

இந்நிலையில் உபி அரசு வழக்கின் ஆவணங்கள் அனைத்தையும் மொழி பெயர்த்து கோர்ட்டில் ஒப்படைத்தது. தலைமை நீதிபதி தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கிறது. சமீபத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது இதற்கான விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளது. இப்படி பாபர் மசூதி கட்டப்பட்டதில் இருந்து இன்று வரை சுமார் 500 ஆண்டுகள் இந்த விவகாரம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

இன்னொரு புறம் அயோத்தி விவகாரத்தில் கோர்ட்டுக்கு வெளியே சமரச முயற்சிகள் நடந்து கொண்டுதான் உள்ளன. காஞ்சி சங்கரச்சாரியார், வாழும் கலை ஸ்ரீஸ்ரீ பண்டிட் ரவிசங்கர் உட்பட பல துறவிகள் இருதப்புடன் சமரசமுயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத், இந்த விவகாரத்தை அரசியல் ஆக்காமல் இருதரப்பிலும் உள்ள தேச பக்தர்கள் இணைந்து ராமர் கோயி்ல் கட்ட வேண்டும் என்று பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட வேண்டிய வழிமுறைகளை கூறி உள்ளார்.

மத்தியில் பாஜ ஆட்சி, பெரும்பாலான மாநிலங்களில் பாஜ அரசு அமைந்துள்ள நிலை மறைமுகமாக இஸ்லாமியர்கள் இந்த விவகாரத்தை தாண்டி இந்துக்களை நெருங்கி வந்துள்ளனர் என்பதைதான் காட்டுகிறது. அதே போல உலக நாடுகள் இன்று இந்தியாவை அதன் முடிவுகளை உற்று நோக்கும் நிலை உருவாகி உள்ளது. இந்த சூழ்நிலையில் அனைவரும் இணைந்து இந்த நாட்டின் லட்சிய புருஷனான ராமனுக்கு கோயில் எழுப்புவது, அது நிச்சயம் அமைதிக் கோயிலாகவும், ஒற்றுமைக்கான  வெளிப்பாடாகவும் அமையும். அது தான் இந்த காலத்திற்கு தேவையான நடவடிக்கை. அது நிறைவேறுமான என்பது இனி வரும் காலங்களில் தெரியும்.

- பாரதி பித்தன்

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.