இந்தியா-வியட்நாம் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமானது

  டேவிட்   | Last Modified : 21 Nov, 2018 06:18 pm
vietnam-and-india-look-to-close-defence-trade-deal

வியட்நாம் சென்றுள்ள இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் இன்று கையொப்பமானது. 

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூன்றுநாள் அரசுமுறை பயணமாக வியட்நாம் சென்றுள்ளார். கடந்த 19ஆம் தேதி வியட்நாமில் உள்ள கடலோர நகரமான டா நாங் நகரில் அவரது விமானம் தரையிறங்கியது. அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
நேற்று தனது மனைவி சவிதா கோவிந்துடன் குவாங் நாம் நகருக்கு சென்ற ராம்நாத் கோவிந்த் கி.பி. 4ஆம் நூற்றாண்டுக்கும் 13ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் சம்பா வம்சத்தை சேர்ந்த மன்னர்களால் உருவாக்கப்பட்ட மை சன் கோவில்களையும், கோபுரங்களையும் பார்த்தார்.

இந்நிலையில், தலைநகர் ஹனோயில் வியட்நாம் அதிபர் ப்ஹு டிராங்-கை இன்று அவர் சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

பாதுகாப்புத்துறை, ஆக்கப்பூர்வமான பயன்பாடுகளுக்காக அணுசக்தியை பயன்படுத்துவது, விண்வெளித்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பெட்ரோலிய கச்சா எண்ணைய், எரிவாயு, உள்கட்டமைப்பு துறை மேம்பாடு, உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளும் உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக இந்த பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டது.

இன்றைய பேச்சுவார்த்தையின்போது சீறி வரும் பயங்ரவாதத்தை அனைத்து வகையிலும் எதிர்ப்பது எனவும் அவர்கள் உறுதியேற்றனர். வியட்நாம் அதிபருடனான இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக பின்னர் ராம்நாத் கோவிந்த், குறிப்பிட்டார்.

தொலைத்தொடர்பு, கல்வி, வர்த்தகம், முதலீடு ஆகிய துறைகளிலும் இருநாடுகளுக்கு இடையில் இன்று சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையொப்பமாகியுள்ளன. 

வியட்நாம் ராணுவத்துக்கு தேவையான ஒத்துழைப்பை நல்கவும், வியட்நாம் கடலோர எல்லைப் பகுதியில் கண்காணிப்பை மேம்படுத்தவும் அதிவிரைவு படகுகளை தயாரிக்க இந்தியா 10 கோடி டாலர்கள் கடன் உதவி அளிக்கும் எனவும் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டார்.

இந்தியா-வியட்நாம் நாடுகளுக்கு இடையிலான கடந்த ஆண்டு வர்த்தகம் 128 கோடி அமெரிக்க டாலர்களாக ஏறுமுகம் பெற்றிருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்த ராம்நாத் கோவிந்த், வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் இது 150 கோடி டாலர்களாக உயரும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close