டெல்லி: நாடாளுமன்றம் நோக்கி இன்று விவசாயிகள் பிரமாண்ட பேரணி

  Newstm Desk   | Last Modified : 30 Nov, 2018 11:03 am

100-000-farmers-begin-walk-in-delhi-to-highlight-farm-distress

வேளாண் கடன்களை ரத்து செய்யக்கோரி இந்திய அளவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட பேரணி நடக்கவிருக்கிறது. 

விவசாய கடன் ரத்து, விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் நீண்ட காலமாக வற்புறுத்தி வருகிறார்கள்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மத்திய அரசை வலியுறுத்தி டெல்லியில் நவம்பர் 29ம் தேதி தொடங்கி 2 நாட்கள் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று இந்த போராட்டம் தொடங்கியது.

போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக உத்தரபிரதேசம், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் நேற்று டெல்லி வந்தனர். ரயில்களிலும், பஸ்களிலும், பிற வாகனங்களிலும் வந்த அவர்கள் போராட்டம் நடைபெறும் ராம்லீலா மைதானத்துக்கு பேரணியாக சென்றனர். ஒருங்கிணைப்பு குழுவின் முக்கிய நிர்வாகிகளின் ஒருவரான ‘சுவராஜ் அபியான்’ தலைவர் யோகேந்திர யாதவ் தலைமையில் ஏராளமான விவசாயிகள் பேரணியில் பங்கேற்றனர்.

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆம்ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து, தேசிய தென்இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கான விவசாயிகள் ரயில் மூலம் டெல்லிக்கு சென்றனர். டெல்லி ரயில் நிலையத்தில் வந்து இறங்கிய அவர்களில் ஆண்கள் அனைவரும் உடனடியாக அரை நிர்வாணத்துக்கு மாறி, மனித எலும்புகள் மற்றும் மண்டை ஓடுகளை கையில் ஏந்தியபடி கோஷமிட்டவாறே பிளாட்பாரத்தில் அணி வகுத்து சென்றனர்.

இந்தியா முழுவதிலும் இருந்து 207 விவசாய சங்கங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டனர். இதனால் டெல்லி மாநகரம் நேற்று ஸ்தம்பித்தது. பல இடங்களில் போக்குவரத்து முடங்கியது.

விவசாயிகளின் பேரணியையொட்டி, டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. டிராக்டர்கள் மூலம் விவசாயிகள் நுழைந்து விடாமல் இருக்க காஜியாபாத், கவுதமபுத்தா நகர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

டெல்லியில் திரண்ட விவசாயிகளுக்கு டெல்லி குடிநீர் வாரியம் சார்பில் குடிநீர் வழங்கப்பட்டது. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உணவு பொட்டலங்களை வழங்கினார்கள்.

விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று வற்புறுத்தும் வகையில், இன்றுவிவசாயிகள் ராம்லீலா மைதானத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்கு ஊர்வலமாக செல்ல முடிவு செய்து உள்ளனர். இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்வார்கள் என்று விவசாய சங்க தலைவர்கள் தெரிவித்தனர்.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close