பா.ஜ.க.வுடன் மல்லுகட்டும் மற்றொரு கூட்டணி கட்சி - மீண்டும் பிளவு ஏற்படுமா?

  Newstm Desk   | Last Modified : 19 Dec, 2018 10:29 am
central-minister-s-lok-janashakthi-party-unhappy-with-bjp

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி கடந்த மார்ச் மாதமும், ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி கடந்த வாரமும் வெளியேறின. அதைத்தொடர்ந்து, கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியான, மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியும் பா.ஜ.க.வுடன் மல்லுகட்டி வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதை உடனடியாக உறுதி செய்யாவிட்டால், கூட்டணியில் பாதிப்பு ஏற்படும் என்று அக்கட்சி எச்சரித்துள்ளது.

பீகாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளமும், பா.ஜ.க.வும் சம அளவிலான தொகுதிகளில் போட்டியிடும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மொத்தம் 40 தொகுதிகள் உள்ள நிலையில், அவ்விரு கட்சிகளும் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது அறிவிக்கப்படவில்லை. கூட்டணியில் இருந்த ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி கடந்த முறை 3 தொகுதிகளில் போட்டியிட்ட  நிலையில், இந்த முறை கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தது. ஆனால், கோரிக்கை ஏற்கப்படாத நிலையில் அக்கட்சியின் தலைவர் உபேந்திர குஷ்வாஹா, மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு கூட்டணியில் இருந்து வெளியேறினார்.

மற்றொரு மத்திய அமைச்சரான ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியும், பா.ஜ.க.வுடனான தொகுதிப் பங்கீட்டில் முரண்டு பிடித்து வருகிறது. கடந்த முறை அக்கட்சி 7 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்தமுறையும் அதற்கு ஈடாக அல்லது அதற்கு மேலான தொகுதிகளை அக்கட்சி கேட்டு வருகிறது. 

இந்நிலையில், ராம்விலாஸ் பாஸ்வானின் மகனும், கட்சியின் உயர்நிலைக் குழுத் தலைவருமான சிராக் பாஸ்வான் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ”தொகுதிப் பங்கீடு குறித்து பா.ஜ.க. தலைவர்களுடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியாகிவிட்டது. இதற்கு உடனடியாக தீர்வு காணப்படாவிட்டால் பாதிப்பு ஏற்படும். கூட்டணியில் இருந்து ஏற்கனவே சில கட்சிகள் விலகியுள்ளதால் இக்கட்டான சூழல் நிலவுகிறது. இந்தச் சூழலில் எஞ்சியுள்ள கட்சிகளின் கோரிக்கைகள் தக்க சமயத்தில், மரியாதைக்குரிய வகையில் தீர்த்து வைக்கப்பட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார். கூட்டணி குறித்து சிராக் பாஸ்வான் எடுக்கும் முடிவே இறுதியானது என ராம்விலாஸ் பாஸ்வான் கூறியிருந்த நிலையில், அவரது கருத்து மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close