ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில், காங்கிரஸின் கருத்துக்கள், பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் ரீதியில் உள்ளதாக பாஜக முன் வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ளார், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சசி தரூர்.
ஜம்மு காஷ்மிர் விவகாரத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் ரீதியில் காங்கிரஸின் பேச்சுக்கள் இருப்பதாக பாஜக உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ள நிலையில், அதற்கு பதிலளித்த சசி தரூர், "காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டதை குறித்தோ, அதனை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்ததை குறித்தோ நாங்கள் எதுவும் கூறவில்லை. இந்திய மக்களின் நலனில் எங்களுக்கும் அக்கறை இருக்கிறது. காஷ்மீர் விவகாரம் குறித்து மத்திய அரசின் பார்வையே, காங்கிரஸ் கட்சிக்கும் உள்ளது. எனினும், ஒரு ஜனநாயக நாடு மக்களை எப்படி நடத்த வேண்டும் என்று மட்டும் தான் நாங்கள் கூற முயல்கிறோம். இரு கையிலும் ஆயுதம் ஏந்தி பாகிஸ்தான் நிற்கும் வரை, அவர்களுக்கு எந்த ஒரு விஷயத்தை குறித்தும் புரிய வைப்பது சாத்தியமில்லாத ஒன்று தான்" எனக் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் ட்ரம்பின் மத்தியஸ்த்தம் குறித்த கேள்விக்கு, "இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனையில் யாருடைய தலையிடுதலும் இருப்பதை நாங்களும் விரும்பவில்லை. ஆனால் எதிர்கட்சி என்ற முறையில் கேள்விகள் எழுப்ப எங்களுக்கு உரிமை இருக்கிறது" என்று பதிலளித்துள்ளார்.
மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்திய பிரதமர் மோடியை "இந்தியாவின் தந்தை" என்று குறிப்பிட்டிருப்பது மிகவும் வேடிக்கையாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Newstm.in