தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள 2017ஆம் ஆண்டிற்கான குற்றங்கள் குறித்த பட்டியலில், "ஜிகாதி பயங்கரவாதிகள்" என்ற ஓர் தனி பிரிவு குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கப்படும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம், 2017 ஆம் ஆண்டிற்கான குற்றங்கள் குறித்தை பட்டியலை கடந்த திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது. இதில், முதன்முறையாக "ஜிகாதி பயங்கரவாதிகள்" என்ற ஓர் தனி பிரிவை குறிப்பிட்டுள்ளது குற்ற ஆவணக் காப்பகம்.
மேலும், குற்றங்கள் குறித்த பட்டியலில், "இந்தியாவுக்கு எதிரான அமைப்புகள் மேற்கொண்ட தாக்குதல்கள் - 2017", "நக்ஸலைட்ஸ் தாக்குதல்கள் 2017" போன்ற புதிய பிரிவுகள், புது இணைப்புகளாக சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த பட்டியலில் வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி, கடந்த 2017ஆம் ஆண்டில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட 377 பயங்கரவாதத் தாக்குதல்களில், அதிகமான தாக்குதல்கள் ஜம்மு காஷ்மீர் பகுதியிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதை தொடர்ந்து, இஸ்லாமியர்களின் புனிதப் போராக கருதப்படும் ஜிகாத்-ஐ குறித்து இப்பட்டியலில் குறிப்பிட்டுள்ளது, பயங்கரவாததிற்கு இனம் மதம் என்பது இல்லை என்னும் இந்தியாவின் நிலைபாடுகளுக்கு எதிராக அமைந்துள்ளது என சில தரப்பிலிருந்து கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.
Newstm.in