ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து, மத்திய அரசு வெளியிட்டிருந்த புதிய இந்திய வரைபடத்தில், நேபாளத்தின் காலாபாணி பகுதியும் இந்தியாவுடன் இணைக்கப்பட்டிருப்பதாக அந்நாடு குற்றம் சுமத்தியிருந்ததை தொடர்ந்து, நேபாளத்துடனான இந்திய பகுதி சற்றும் மாற்றியமைக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்று, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்குமாறு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்ததை தொடர்ந்து, மாற்றியமைக்கப்பட்ட இந்தியாவின் வரைபடத்தை கடந்த நவம்பர் 2ஆம் தேதியன்று வெளியிட்டிருந்தது மத்திய அரசு.
இந்த புதிய வரைபடத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான முசாபர்பூர் மற்றும் மிர்பூர் பகுதிகள் ஜம்மு காஷ்மீருடனும், கார்கில் மற்றும் கில்கிட் பல்கிஸ்தான் பகுதிகள் லடாக் உடனும் இணைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வெளியிடப்பட்டுள்ள புதிய வரைபடத்தில், நேபாள நாட்டின் பகுதியான காலாபாணியும் இணைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியிருந்து.
இதை தொடர்ந்து, நேபாள அமைச்சகத்தின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பேச்சாளர் ரவீஷ் குமார், "யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லை பகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான காஷ்மீரின் முசாபர்பூர் மற்றும் மிர்பூர் பகுதிகள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதை தவிர இந்திய வரைபடத்தில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அதிலும் நேபாளம் குறிப்பிடுவதுபோல எந்த மாறுதல்களும் மேற்கொள்ளப்படவில்லை" என்று விளக்கமளித்துள்ளார்.
Newstm.in