பிரிக்ஸ் மாநாடு இந்தியாவிற்கு முக்கியமானதாக கருதப்படுவது ஏன்??

  அபிநயா   | Last Modified : 13 Nov, 2019 08:40 pm
why-brics-matters-for-india

பிரேசிலில் இன்றும் நாளையும் நடைபெறவிருக்கும் 11வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று (செவ்வாய்கிழமை) பிரேசில் பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி. இந்நிலையில், இந்தியாவிற்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு முக்கியமானதாக கருதப்படுவது ஏன் என்பதை குறித்து தெரிந்து கொள்வது அவசியமாகும். 

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நான்கு நாடுகளையும் ஒருங்கிணைத்து "பிரிக்" முதல் முறையாக குறிப்பிட்டது கடந்த 2001 ஆம் ஆண்டு கோல்ட்மென் சாக்ஸ் நிறுவனத்தின் சர்வதேச பொருளாதார அறிக்கையில் தான். இந்த வார்தையை உபயோகித்திருந்தவர் அந்நிறுவனத்தின் வணிக செயலாளரான ஓ நைல் என்பவர். 

இவர் தனது சர்வதேச பொருளாதார அறிக்கையில், பிரிக் நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகியவை தற்போது உலகளவிலான உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவீதம் வகித்து வந்தாலும், இன்னும் 10 ஆண்டுகளில் மிகபெரும் பொருளாதார சக்திகளாக உருவாகும் என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்தியாவின் மக்கள் தொகையையும், அதன் ஆற்றலையும் வைத்து பார்க்கும் போது பிரிக் நாடுகளில் மிக முக்கியமான நாடாக இந்தியாவை கருதுவதே சரி என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், ஜி7 அமைப்பை ஜி9 அமைப்பாக மாற்றியமைப்பதோடு, பிரிக் நாடுகளையும் அதனுடன் இணைப்பது உலக அளவில் பொருளாதாரம் மேண்மையடைய வழிவகுக்கும் என்ற கருத்தையும் அவர் முன்வைத்திருந்தார். 

இதை தொடர்ந்து, கடந்த 2006ஆம் ஆண்டு, இந்த பிரிக் நாடுகளின் நான்கு தலைவர்களான லுலா சில்வா(பிரேசில்), திமித்ரி மெட்வெடெவ்(ரஷ்யா), மன்மோகன் சிங்(இந்தியா) மற்றும் கூ சிங்தாவ்(சீனா) ஆகிய நால்வரும் இணைந்து இந்த கூட்டமைப்பிற்கு உருவமளித்தனர். இதன் பின்னர், கடந்த 2010ஆம் ஆண்டு இந்த பிரிக் கூட்டமைப்புடன் தென் ஆப்பிரிக்காவும் இணைக்கப்பட்டு, "பிரிக்ஸ்" என்று மாற்றியமைக்கப்பட்டது. 

இவரின் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது எவ்வளவு உண்மை என்பது 18 வருடங்கள் கழித்து அனைவரும் உணர்ந்துள்ளனர். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் இணைப்பான இந்த பிரிக்ஸ் கூட்டமைப்பு, உலக மக்கள் தொகையில் 42 சதவீதமும், உலகளவிலான உள்நாட்டு உற்பத்தியில் 23 சதவீதமும், உலக வர்த்தகத்தில் 17 சதவீதமும் வகிக்கிறது. 

முதல் முறையாக கடந்த 2014ஆம் ஆண்டு பிரேசிலின் ஃபோர்டலீசாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி பங்குபெறும் 6வது பிரிக்ஸ் கூட்டமைப்பு மாநாடு இது.

இந்தியாவை பொறுத்தவரை பிரிக்ஸ் கூட்டமைப்பு என்பது வளர்ச்சியை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் நாடுகளுக்கான ஓர் அழகான மேடை. இந்த கூட்டமைப்பில் அமைந்திருக்கும் நாடுகள் ஐந்துமே வளர்ச்சியை நோக்கி வேகமாக முன்னேறி கொண்டிருப்பதால், இந்த ஐந்து நாடுகளின் மேம்பாட்டிற்கு இந்த கூட்டமைப்பு பெரும் உதவியாக இருந்து வருகிறது. 

கடந்த சில ஆண்டுகளாக, இந்தியா, சர்வதேச அளவில் மிகபெரும் வளர்ச்சியை கண்டிருக்கும் நாடாகவே அனைவராலும் கருதப்பட்டு வருகிறது. இந்நிலையில் வளர்ந்த நாடுகளுடன் தன்னை ஒப்பீடு செய்து மெருகேற்றி கொள்வதற்கு இந்த கூட்டமைப்பு பெரும் உதவியாக இருந்து வருகிறது. 

இந்நிலையில் தற்போது பிரேசிலில் நடைபெற்று கொண்டிருக்கும் 11வது பிரிக்ஸ் மாநாடு சர்வதேச அளவில் அச்சுறுத்தலாக அமைந்து வரும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி, இன்டர்நெட்-ஐ பயங்கரவாதத்திற்கு ஓர் கருவியைக பயன்படுத்துவது, தீவிரமயமாக்கலை எதிர்கொள்வது, அயல்நாட்டு பயங்கரவாத போராளிகளின் அச்சுறுத்தல்கள் மற்றும் திறன் மேம்பாடு போன்ற முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க உள்ளது.  

இதில் மிகவும் முக்கியமான பகுதியாக பயங்கரவாதம் என்ற ஒன்றை அனைத்து நாடுகளும் முன்னிறுத்துகின்றன. இது இந்தியாவிற்கு கூடுதல் ப்ளஸ் ஆகவே அமைந்திருக்கின்றது. இன்று இந்த கூட்டமைப்பு மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடியும், உலகின் 5 முக்கிய பொருளாதார நாடுகளும் ஒன்றிணைந்து பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

தற்போதைய கூட்டமைப்பு மாநாட்டில் பயங்கரவாத எதிர்ப்பு என்பது முன்னிறுத்தப்பட்டாலும், டிஜிட்டல் பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பாதுகாப்பு, வர்த்தகம், விவசாயம், எரிப்பொருள் ஆற்றல், விண்வெளி போன்ற அனைத்து துறைகள் குறித்த விரிவான கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளது பிரிக்ஸ் நாடுகள். 

இதை தொடர்ந்து, கடந்த 2016 ஆம் ஆண்டின் பிரிக்ஸ் மாநாடு இந்தியாவின் முக்கிய சுற்றுலா மாநிலமான கோவாவில் நடைபெற்றதை தொடர்ந்து, 2021ஆம் ஆண்டிற்கான மாநாடு தலைநகரமான டெல்லியில் நடைபெறவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை தொடர்ந்து, 2022ஆம் ஆண்டிற்கான ஜி20 கூட்டமைப்பு மாநாடும் டெல்லியில் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close