இந்திய அரசியலமைப்பு சட்டம் வரையறுக்கப்பட்டு 70வது ஆண்டு காலம் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது நாடாளுமன்றத்தில் கொண்டாடப்பட்டு வரும் விழாவில் உரையாற்றியுள்ளார் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு.
கடந்த 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி, இந்திய அரசியலமைப்பு சட்டம் வரையறுக்கப்பட்டதை தொடர்ந்து, இன்றுடன் 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் அதற்கான விழா தற்போது வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகாராஷ்டிராவில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி அமைப்பது குறித்த சிக்கல்களை தொடர்ந்து, எதிர்கட்சிகள் இந்த விழாவில் பங்கேற்க மறுப்பு தெரிவித்திருத்துள்ளன.
இந்நிலையில், இவ்விழாவில் உரையாற்றிய துணை குடியரசுத் தலைவர், நமது அரசியல் வடிவமைக்கப்பட்டதற்கு மிக முக்கிய காரணமாக திகழ்வது இந்திய அரசியலமைப்பு சட்டம் என்றும், இத்தகைய சிறப்பு மிக்க அரசியல் சட்டத்திற்கு அழகுச் சேர்த்து நம் நாட்டை வலிமையாக்க வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளதென்று என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தியாவின் மூளையில் இருக்கும் கடைசி மனிதர் முன்னேற்றம் அடைவதில் தான் நாட்டின் வெற்றி உள்ளதென்றும் அதற்காக உழைக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகள் மட்டுமல்லாது, நம் கடமைகளையும், பொறுப்புகளையும், தெரிந்து கொண்டு, இந்தியர்கள் அனைவரும் அதனை சரிவர செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ளார் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு.
Newstm.in