இது குப்பைத் தொட்டி இல்லை... மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சாட்டை அடி!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 06 Feb, 2018 06:22 pm

மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததால் இது ஒன்றும் குப்பைத் தொட்டி இல்லை... என்று மத்திய அரசுக்குக் குட்டு வைத்தது உச்ச நீதிமன்றம். 

திடக் கழிவு மேலாண்மை விதிகள் 2016ஐ நாடு முழுவதும் அமல்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டிருந்தது. அதன்படி, 845 பக்கம் கொண்ட பிரமாண பத்திரத்தை மத்திய அரசு வழக்கறிஞர் இன்று தாக்கல் செய்தார். அதில், பல்வேறு தகவல்கள் தப்பும் தவறுமாக இருந்திருக்கிறது. 

வழக்கை விசாரித்த மதன் பி லோகூர், தீபக் குப்தா அமர்வு, பிரமாண பத்திரத்தை ஏற்க மறுத்தனர். அப்போது அவர்கள், "பிரமாண பத்திரத்தில் போதுமான தகவல்கள் இல்லை. அனைத்தையும் சரி பார்ப்பதற்கு முன்பு நீதிமன்றத்தில் குப்பை போலக் கொண்டுவந்து தாக்கல் செய்யக் கூடாது. நீங்கள் என்ன செய்ய நினைக்கின்றீர்கள்? எங்களைக் கவர நினைக்கின்றீர்களா? நாங்கள் உங்கள் செயலால் கவரப்படவில்லை. எல்லாவற்றையும் குப்பை போல அடைக்க நினைக்கின்றீர்கள். இதை நாங்கள் ஏற்க முடியாது. இதைப்போல் இனி செய்யாதீர்கள். நாங்கள் குப்பையைச் சேகரிப்பவர்கள் இல்லை. இதை மனதில் வைத்து நடந்துகொள்ளுங்கள்" என்றனர். 

தொடர்ந்து நடந்த வழக்கு விசாரணையின்போது, "திடக் கழிவு மேலாண்மை தொடர்பாக 2000ம் ஆண்டிலேயே சட்டத்தை வகுத்திருக்கின்றீர்கள். ஆனால் எந்த ஒரு மாநிலமும், யூனியன் பிரதேசமும் அதை அமல்படுத்தவில்லை. அதன்பிறகு 2016ல் புதிய விதிமுறைகளை வகுத்திருக்கிறீர்கள். ஆனால், இது தொடர்பாக யாருக்குமே ஆர்வம் இல்லை.மிக எளிய விதிமுறைகளைக் கூட மாநிலங்கள் பின்பற்ற மாட்டார்கள் என்றால், மிகக் கடுமையான விதிமுறைகளை எல்லாம் எப்படிப் பின்பற்றுவார்கள்?

மத்திய அரசின் ஆலோசனைகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்வது இல்லையா? பிறகு எதற்கு இதுபோன்ற விதிமுறைகளை வகுக்கின்றீர்கள்? இவற்றை எல்லாம் நீங்களே திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள் " என்றனர். உச்ச நீதிமன்றத்தின் சாட்டையடி கேள்விகளால் அரசு வழக்கறிஞர் விழிபிதுங்கிப்போய் உள்ளார். வழக்கு விசாரணை மீண்டும் நாளை வருகிறது. அப்போது என்ன எல்லாம் கேட்கப் போகிறார்களோ...

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close