காவிரி: கால அவகாசம் கேட்கும் மத்திய அரசு; கர்நாடகத் தேர்தல் காரணமா?

  Newstm Desk   | Last Modified : 27 Apr, 2018 12:22 pm


காவிரி விவகாரத்தில் செயல் திட்ட வரைவை சமர்ப்பிக்க மேலும் இரண்டு வார கால அவகாசம் கோரி மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு அளித்துள்ளது. 

காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில், 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ல் உத்தரவு பிறப்பித்தது. அந்தகாலக்கெடு முடியும் சமயத்தில் தான் உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்ட 'ஸ்கீம்' என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு ஒரு மனு, பின்னர் கால அவகாசம் கோரி ஒரு மனு மத்திய அரசு சார்பில் அளிக்கப்பட்டன. 

இதையடுத்து, இந்த மனுக்களின் மீதான விசாரணையில் நீதிபதிகள் கூறுகையில், "காவிரி விவகாரத்தில் நடுவர் மன்ற தீர்ப்பை இணைத்தே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே காவிரி பிரச்னையில் ஒரு செயல் திட்ட வரைவை உருவாக்கி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வரும் மே மாதம் 3ம் தேதிக்குள்ளாக தாக்கல் செய்ய வேண்டும்" என தெரிவித்தனர்.

இந்த காலக்கெடு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடையவுள்ள நிலையில், வரைவு திட்டத்தை சமர்ப்பிக்க மேலும் இரண்டு வார காலம் அவகாசம் கேட்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு அளித்துள்ளது. இந்த மனுவின் மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு இந்த மனு அளித்ததற்கு தமிழக அரசியல் தலைவர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. "மத்திய அரசு கால அவகாசம் கேட்டதற்கு கர்நாடகத் தேர்தல் தான் காரணம். கர்நாடகாவில் பா.ஜ.க வெற்றி பெற வேண்டும் என்ற தீவிர முனைப்போடு பிரச்சாரம் செய்து வரும் வேளையில், காவிரி திட்டத்தை கையில் எடுத்தால் பதட்டமான சூழல் உருவாகலாம் என எண்ணி தான் மத்திய அரசு கால அவகாசம் கேட்டுள்ளது" என தமிழக எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. வருகிற மே 12ம் தேதி கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close