கார்த்தி சிதம்பரம் கைது! - பின்னணி என்ன?

  PADMA PRIYA   | Last Modified : 05 Jun, 2018 04:34 am

ஐஎன்எக்ஸ் மீடியா செய்த மோசடி பண பரிவர்த்தனையில் உடந்தையாக செயல்பட்டதானப் புகாரில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். லண்டனில் இருந்து சென்னை திரும்பிய அவரை விமான நிலையத்திலேயே கைது செய்து சி.பி.ஐ அதிகாரிகள் அழைத்துச் செய்தனர்.

வழக்கின் பின்னணி: கடந்த 2007ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது தந்தையின் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.307 கோடி வெளிநாட்டு முதலீட்டைப் பெற அந்நிய முதலீட்டு வாரியத்திடம் இருந்து அனுமதி பெற்று தந்துள்ளார். இதில் மிகப் பெரிய அளவிலான முறைகேடு நடந்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா: மும்பையைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் நடத்தி வந்த ஐஎன்எக்ஸ் மீடியா என்ற தொலைக்காட்சி நிறுவனம் தான் விதிமுறைகளை மீறி ரூ.305 கோடிக்கு தனது பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றது. இவர்களுக்கு தான் தந்தையின் அதிகாரத்தை பயன்படுத்தி தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக கார்த்தி உதவி செய்ததாக குற்றச்சாட்டு. இதையடுத்து கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். கார்த்தி சிதம்பரத்தின் மீது 5 பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்தனர்.

சிபிஐ வழக்கு: இந்த விவகாரத்தில் கருப்புப் பணம் தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியாக ஒரு வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகிறது. கார்த்தியின் ஆடிட்டர் கைது; இது தொடர்பாக சில தினங்களுக்கு முன்பு கார்த்தியின் ஆடிட்டரும் நெருங்கிய நண்பருமான எஸ்.பாஸ்கர ராமனை கருப்புப் பண முறைகேடு தொடர்பாக டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வைத்து அமலாக்கப் பிரிவினர் கைது செய்தனர். அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்த நிலையில் கார்த்தியின் கைது நடந்துள்ளது.

ஆடிட்டர் வாக்குமூலம்: கைதான கார்த்தியின் ஆடிட்டர் பாஸ்கரனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது நடந்ததாக சிபிஐ வட்டாரம் தெரிவிக்கிறது. கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு என்பது தன்மீது நடத்தப்படும் திட்டமிட்ட தாக்குதல் என்று கடந்த வாரம் தான் சுப்ரீம் கோர்டில் ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் கைது நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு அன்னிய மூதலீட்டுக்கான அனுமதியை பெற்றுத் தர பல கோடி ரூபாய் பெற்ற வழக்கு மட்டுமல்ல... ராஜஸ்தானில் 108 ஆம்புலன்ஸ் சேவை இயக்கியது, ஏர்செல் - மேக்சிஸ் விற்பனை பண பரிவர்த்னை, கணக்கில் வராத வகையில் பல நாடுகளில் பல கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பது என ஏராளமான வழக்குகள் உள்ளன.

கார்த்தி சிதம்பரத்தின் பின்னணி? மத்திய நிதியமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்த ப.சிதம்பரம் - நளினி சிதம்பரத்தின் மகன் தான் கார்த்தி சிதம்பரம். 1971 நவம்பர் மாதம் பிறந்தார். பூர்வீகம் மிகப் பெரியது. செட்டிநாட்டு வம்சத்தின் ராஜா என்று அழைக்கப்பட்ட சர் அண்ணாமலை செட்டியார், ப. சிதம்பரத்தின் தாய் வழித் தாத்தா. அதாவது, கார்த்தி சிதம்பரத்தின் கொள்ளுத் தாத்தா.

பதவிகள்? டென்னிஸ் பிரியர். பல டென்னிஸ் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கும் கார்த்தி சிதம்பரம், அகில இந்திய டென்னிஸ் சங்கத்திலும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்திலும் துணைத் தலைவராகப் பதவி வகித்தார். பல்வேறு நிறுவனங்களில் முக்கியப் பங்குதாரராக இருந்தார். நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருந்தாலும் 2014ஆம் ஆண்டில்தான் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டார் கார்த்தி. அப்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட கார்த்தி, தோல்வியைச் சந்தித்தார்.

சர்ச்சைகள்: 2015ம் ஆண்டு பிரதமரை புகழ்ந்து பேசியதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் அதிருப்திக்கு ஆளானார். இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது வாக்குக்கு பணம் பெறக் கூடாது என்று இவர் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தியது பொது மக்களால் விமர்சனத்துக்குள்ளானது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close