கர்நாடகாவுக்கு செக்; 4 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட உச்ச நீதிமன்றம் உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 03 May, 2018 12:09 pm


தமிழகத்திற்கு தர வேண்டிய 4 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா உடனடியாக திறந்து விட வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் அதனை மத்திய அரசு செயல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது என்ற ஒரு குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகின்றன. முந்தைய விசாரணையில், மே 3ம் தேதிக்குள் காவிரி செயல்திட்ட வரைவு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இதையடுத்து வரைவு அறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரி மத்திய அரசு நேற்று(மே.2) உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு அளித்தது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன்பாக விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகி வாதாடினார், அவர், "காவிரி வரைவு திட்டம் தயாராக உள்ளது. ஆனால் பிரதமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் கர்நாடகா தேர்தலில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளதால் ஒப்புதல் வாங்க கால அவகாசம் தேவைப்படுகிறது. இன்னும் 10 நாட்கள் கால அவகாசம் தேவை" என வாதாடினார்.

தமிழக அரசு தரப்பில், "மத்திய அரசு கர்நாடக தேர்தலை காரணம் காட்டி தாமதப்படுத்துகிறது. கர்நாடக தேர்தலையும், காவிரி விவகாரத்தையும் ஒப்பிட வேண்டாம். காவிரி வழக்கை வேண்டுமென்றே இழுத்தடிக்கும் நோக்கிலே மத்திய அரசு செயல்படுகிறது. கர்நாடகாவுக்கு ஆதரவு காட்டி, தமிழகத்தை புறந்தள்ளுகிறது. எனவே இன்றே காவிரி விவகாரத்தில் ஒரு முடிவு எட்டப்பட வேண்டும். அதே நேரத்தில் ஏற்கனவே கர்நாடகா, தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் தர வேண்டியுள்ளது. தற்போது தமிழகத்தில் வறட்சி நிலவுவதால் இம்மாதம் திறந்து விட வேண்டிய நீரை சேர்த்து வழங்க வேண்டும்" என கோரிக்கை வைக்கப்பட்டது. 

விசாரணைக்கு பிறகு நீதிபதிகள், "மொத்தமாக தமிழகத்திற்கு தர வேண்டிய  4 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா உடனடியாக வழங்க வேண்டும். இல்லையெனில் கர்நாடகா விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும். இந்த விவகாரத்தில் அரசியல் காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே காவிரி விவகாரத்தில் மத்திய அரசு என்ன செய்தது என்பது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்" என கூறி வழக்கு மே 8ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close