தலைமை நீதிபதிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த காங். எம்.பி-க்கள்!

  Newstm Desk   | Last Modified : 07 May, 2018 01:31 pm


தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனுவை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்ததற்கு எதிராக காங்கிரஸ் எம்.பிக்கள் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகளுக்கு வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுகிறார் என உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் 4 பேர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தனர். இந்த விவகாரம் இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பல்வேறு முறைகேடு புகார்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், மாநிலங்கள் அவையில், எதிரிக்கட்சிகள் இணைந்து தீபக் மிஸ்ராவை தகுதி நீக்கம் செய்யக்கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்ய முடிவு செய்தனர்.


காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து கையெழுத்திட்டு இதற்கான மனு மாநிலங்கள் அவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான வெங்கையா நாயுடுவிடம் அளிக்கப்பட்டது. இந்த மனு தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்த வெங்கையா நாயுடு கடந்த 27ம் தேதி மனுவை நிராகரித்தாக  அறிவித்தார். 

வெங்கையா நாயுடுவின் இந்த நிராகரிப்பை எதிர்த்து காங்கிரஸ் எம்.பிக்கள் இரண்டு பேர் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். நீதிபதி செல்லமேஸ்வரர் அடங்கிய அமர்வுக்கு அளிக்கப்பட்ட மனுவில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கக் கோரிய மனுவை மீண்டும் பரிசீலிக்க வெங்கையா நாயுடுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும், இந்த வழக்கை அவசர வழக்காகவும் விசாரிக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் எம்.பிக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் தொடர் குற்றச்சாட்டு காரணமாக, மக்கள் மத்தியில் உச்ச நீதிமன்றம் மீதான நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து வருகிறது. இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருத்து தெரிவித்துள்ளனர் சட்ட வல்லுனர்கள்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close