தலைமை நீதிபதி பதவி நீக்கம் குறித்து விசாரிக்கிறது அரசியல் சாசன பெஞ்ச்!

  SRK   | Last Modified : 07 May, 2018 10:04 pm


உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரிய தீர்மானம் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கை விசாரிக்க, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் நியமிக்கப்பட்டுள்ளது. 

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா விதிமீறல்களில் ஈடுபடாதாக குற்றம் சாட்டிய காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் அவரை பதவி நீக்கம் செய்ய தீர்மானம் நிறைவேற்ற முயற்சி செய்தன. இந்த தீர்மானத்தை சபைக்கு கொண்டுவர, 50 ராஜ்ய சபா எம்.பி.க்கள் சேர்ந்து கையெழுத்திட்டனர். ஆனால், அதை சபைக்கு கொண்டு வர ராஜ்ய சபா சபாநாயகரும், துணை ஜனாதிபதியுமான வெங்கய்ய நாயுடு மறுப்பு தெரிவித்தார். 3 நாட்களில் அந்த தீர்மானத்தை அவர் நிராகரித்தார். 

இந்த விவகாரத்தில் துணை ஜனாதிபதி சட்ட விரோதமாக செயல்பட்டதாகவும், பொறுப்பில்லாமல் அவசர முடிவெடுத்ததாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு தொடுத்துள்ளன. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் வழக்கறிஞர் கபில் சிபல் வலியுறுத்தினார். தலைமை நீதிபதிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மூத்த நீதிபதி செலமேஸ்வர் தலைமையிலான பெஞ்ச் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், அதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.

யார் விசாரிக்க வேண்டுமென தலைமை நீதிபதி தான் முடிவெடுக்க வேண்டும் என அவர்கள் கூறினார்கள். தலைமை நீதிபதி தொடர்பான  விவகாரம் என்பதால் இதில் அவர் முடிவெடுக்க கூடாது என சிபல் கூறினார். பின்னர் இதை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் நியமிக்கப்பட்டது. இதில் தலைமை நீதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்த மூத்த 4 நீதிபதிகளில் ஒருவர் பெயரும் இடம்பெறவில்லை. 

நீதிபதிகள் ஏ.கே சிக்ரி, எஸ்.ஏ போப்டே,  என்.வி ரமணா, அருண் மிஷ்ரா, ஏ.கே கோயல் ஆகியோர் கொண்ட பெஞ்ச் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சீனியாரிட்டியில் 6வது இடத்தில் உள்ள நீதிபதி சிக்ரி தலைமை வகிப்பார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close