காவிரி நீர் பங்கீட்டில் மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை: உச்ச நீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 17 May, 2018 01:17 pm


காவிரி நீர் பங்கீட்டில் மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை, வாரியத்தின் முடிவே இறுதியானது என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. 

காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் மத்திய அரசு வரைவுத் திட்டத்தினை கடந்த மே 14ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. காவிரி வாரியம் என்ற ஒரு குழுவை அமைத்து அந்த குழுவிற்கான அதிகாரங்களையும் வரைவுத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மே 14ல் நடந்த விசாரணையில், வரைவுத் திட்டம் குறித்து பரிசீலித்து மாநில அரசுகள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு மே 16ம் தேதி (இன்று) வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

இன்றைய வழக்கின் விசாரணையில் மாநில அரசுகள் தரப்பில் பல்வேறு விவாதங்கள் முன்வைக்கப்பட்டன.

கர்நாடகா தரப்பில், "காவிரி நீர் பயன்பாட்டிற்கு குழுவிடம் அனுமதி பெற வேண்டும் என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஒதுக்கப்பட்ட தண்ணீரை நாங்கள் சுதந்திரமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். மற்றபடி காவிரி வரைவுத்திட்டத்தில் உள்ள ஏனைய அம்சங்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்" எனக்கூறியது. மேலும், அரசியல் சூழ்நிலை கருதி வழக்கை ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைக்கவேண்டும் என்ற கர்நாடகாவின் கோரிக்கை உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. 

தமிழகம் தரப்பு வழக்கறிஞர், "காவிரி வாரியக்குழுவின் தலைமையகத்தை பெங்களூருவுக்கு பதில் டெல்லியில் வைக்க வேண்டும். பெங்களூரு என்பதால் இதில் சில அரசியல் பிரச்னைகள் நிகழ வாய்ப்பிருக்கிறது" என வாதிட்டது. ஆனால் இதற்கு உச்சநீதிமன்றம் முதலில் மறுத்த நிலையில் பின்னர் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

தொடர்ந்து, 'காவிரி வரைவு அறிக்கையில் மாநிலங்களுக்கு இடையே காவிரி நீர் வழங்குவதில் பிரச்னை இருந்தால் மத்திய அரசை நாட வேண்டும் என்று இருக்கிறது. நாங்கள் ஒவ்வொரு முறையும் மத்திய அரசிடம் சென்று காவிரி நீருக்காக நிற்க முடியாது. அனைத்து அதிகாரங்களும் காவிரி வாரிய குழுவிடமே இருக்க வேண்டும்" என கோரிக்கை வைத்தது. 

அதற்கு நீதிபதிகள் பதிலளிக்கையில், "காவிரி நீர் பங்கீடு தொடர்பாக வாரியமே அனைத்து முடிவுகளையும் எடுக்கும். இதில் மத்திய அரசுக்கு  எந்த அதிகாரமும் இல்லை. எனவே நீங்கள் மத்திய அரசை அணுகத் தேவையில்லை" என்றனர். 

அதேபோன்று தமிழகம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட 'காவிரி மேலாண்மை வாரியம்' என்ற பெயருக்கு மத்திய அரசும், கர்நாடக அரசும் ஒப்புதல் அளித்துள்ளன. 

மேலும் நீதிபதிகள், "கர்நாடகாவோ, தமிழகமோ வாரியத்தின் அனுமதியின்றி எந்தவித அணைகளையும் கட்டக்கூடாது" எனவும் உத்தரவிட்டனர்.

தொடர்ந்து திருத்திய வரைவுத்திட்டத்தினை மத்திய அரசு நாளை(மே.17) தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நாளைய தினத்துக்கு ஒத்திவைத்தது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close