இந்துக்களின் நம்பிக்கைகளை சிதைக்கிறது உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்: இராம கோபாலன்

  Newstm Desk   | Last Modified : 25 Oct, 2018 03:36 am
ramagopalan-statement-about-supreme-court-s-order

உச்சநீதி மன்றம் அளிக்கும் தீர்ப்புகள், இந்துக்களின் நம்பிக்கைகளை சிதைப்பதாகவும், அதிர்ச்சி அளிப்பதாகவும் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம கோபாலன் தெரிவித்துள்ளார்.

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக கருதப்பட்டு வருவது நீதிமன்றங்களை அணுகியபோது, மக்களின் உணர்வுகளையும், பாரம்பரிய பழக்க வழக்கங்களையும் அறிந்து தீர்ப்பு கூறிய உயர்ந்த நீதிபதிகள் இருந்து வந்தனர்.  ஆனால், சமீப காலங்களில் அடுத்து அடுத்து வந்த தீர்ப்புகளான, ஓரினச் சேர்க்கைக்கு அனுமதி, தகாத உறவு குற்றமில்லை, ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் உள்ளிட்ட தீர்ப்புகள் இந்துக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளன.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிப்பது குறித்த தீர்ப்பு நேற்று வந்துள்ளது. தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே வெடிக்க வேண்டும். அதே சமயம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய நாட்களில் இரவு 11.55 மணியிலிருந்து 12.30 மணி வரை வெடிக்கலாம். இப்படிப்பட்ட தீர்ப்புக்குக் காரணம், ஒன்று இவ்வழக்கை எதிர்த்து வாதாடிய வழக்கறிஞர்கள் சரியாக கையாளவில்லை, அரசு வழக்கறிஞர்கள் மக்களின் கருத்தை, பாரம்பரியமாக தொன்றுதொட்டு வரும் பழக்கவழக்கங்கள் குறித்து முறையாக நீதிபதிக்கு எடுத்துக் கூறவில்லையா? அல்லது மாண்புமிகு நீதியரசர்களாக இருப்பவர்களுக்கு இந்நாட்டு மக்களின் உணர்வுகளை அறியாத வெளிநாட்டினரா? என்ற கேள்விகள் எழுகின்றன!

கிறிஸ்தவ மதத்தின் கோட்பாட்டிலோ, கிறிஸ்தவ நாடுகளிலோ கூட நள்ளிரவில் பட்டாசு வெடிப்பது என்பது கிடையாது. சமீப காலமாகத்தான் இவ்வழக்கம் கிறிஸ்தவர்களிடம் ஏற்பட்டு வருகிறது. அதற்கு மதிப்பளித்த உச்ச நீதிமன்றம், கலியுகத்திற்கு முந்தைய யுகத்தில் தோன்றிய நரகாசுர வதம் பற்றியும், அவனின் சம்ஹாரமான, அரக்கனின் அழிவை அப்போதிலிருந்து மக்கள் கொண்டாடி வருவதையும் ஏன் கவனத்தில் கொள்ளவில்லை?
பட்டாசு தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கி, மீண்டும் சிவகாசி போன்ற தமிழகத்தின் கடைக்கோடி நகரங்களை பாலைவனமாக்க நடக்கும் சதியோ என்ற கவலை நமக்கு வருகிறது.

ஒரிரு நாட்கள் பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுகிறது என்றால், வருடம் முழுவதும் பூச்சி கொல்லி மருந்து, கொசு மருந்து, பெட்ரோல், டீசல் புகை எனும் நச்சு மருந்தால், காற்று மாசு சூழ்ந்து வருவது குறித்து ஏன் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை? இவற்றோடு ஒப்பிடும்போது, பட்டாசு புகையால் வரும் மாசு குறைவு, நன்மை அதிகம் என்ற உண்மை நன்கு விளங்கும்.

எனவே, உச்சநீதி மன்றம், பட்டாசு வெடிக்க விதித்துள்ள கட்டுப்பாடுகளை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் முயற்சியை உடனே எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. நமது பாரம்பரிய விழாக்கள், பண்டிகைகள் குறித்து போடப்படும் வழக்குகளில் இன்னமும் அரசு வழக்கறிஞர்கள் அதிக கவனம் கொடுத்து வாதாடி மக்களின் உணர்வுகளை, உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். வருகின்ற தீபாவளி திருநாள் எந்தவித இடர்பாடும் இல்லாமல் மக்கள் கொண்டாட, இந்து முன்னணி இயக்கம், மக்களை ஒருங்கிணைத்து ஜனநாயக வழியில் போராடும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close