சபரிமலை தீர்ப்பு: மறுஆய்வு மனுக்கள் மீது ஜனவரி 22ல் விசாரணை!

  Newstm Desk   | Last Modified : 13 Nov, 2018 05:32 pm
review-petitions-on-sabarimala-to-be-heard-on-jan-22

சபரிமலை சன்னிதானத்துக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மறுஆய்வு மனுக்களை, வரும் ஜனவரி 22ம் தேதி விசாரிக்க உள்ளதாக உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது. 

சபரிமலை சன்னிதானத்துக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரி தொடுக்கப்பட்ட வழக்கில், கடந்த செப்டம்பர் 28ம் தேதி, அனைவரையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக கேரளா மட்டுமல்லாமல், பல்வேறு மாநிலங்களில் உள்ள இந்து அமைப்புக்கள் தொடர் போராட்டங்களை நடத்தின.

சபரிமலை சந்னிதானத்துக்குள் 10 வயதுக்கு கீழ்ப்பட்ட மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே நுழைய வேண்டும் என்ற பாரம்பரிய சம்பிரதாயத்தை உடைக்கும் வகையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். அதன்பின், தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனு தொடுக்கவுள்ளதாக கேரளா தேவசம் போர்டு தெரிவித்தது. 

சபரிமலை விவகாரத்தில் தொடுக்கப்பட்ட 49 மறுஆய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை மேற்கொண்டது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் ரொஹின்டன் நரிமன், இந்து மல்ஹோத்ரா, டி.ஒய் சந்திரசூட், ஏ.எம் கன்வில்கர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுக்கள் மீதான விசாரணையை மேற்கொண்டது. 

மனுக்களை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், ஜனவரி மாதம் 22ம் தேதி, அவற்றை விசாரிக்க உள்ளதாக தெரிவித்தது. ஆனால், அதுவரை, சபரிமலை விவகாரத்தில் செப்டம்பர் மாதம் அளிக்கப்பட்ட தீர்ப்பு தொடர்பாக எவ்வித இடைக்கால தடையும் வழங்க முடியாது எனவும் குறிப்பிட்டது.

முன்னதாக, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் சஞ்சய் கிஷான் பால் மற்றும் கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், சபரிமலை விவகாரத்தில் தொடுக்கப்பட்டுள்ள நான்கு இடைக்கால மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டது. அப்போது மறுஆய்வு மனுக்களின் மீதான விசாரணை நடத்தி, அதுகுறித்து தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னரே இடைக்கால மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இயலும் என்று கூறி அவற்றை ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close