பெண் நீதிபதி பாலியல் புகார்: நீதித்துறையின் குற்றச்சாட்டும் மத்திய அரசின் மறுப்பும்!

  Padmapriya   | Last Modified : 31 Mar, 2018 12:06 pm

நீதித்துறையில் மத்திய அரசு தலையிடுவதாக உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர், தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அனைத்து நீதிபதிகளையும் அழைத்து விவாதிக்குமாறு அந்தக் கடிதத்தில் அவர் எழுதியுள்ளார். மேலும், கர்நாடகாவில், பாலியல் புகாரில் சிக்கிய மாவட்ட நீதிபதி பி.கிருஷ்ணா பட் என்பவரை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க 2 தடவை உச்ச நீதிமன்ற கொலிஜியம் சிபாரிசு செய்தும், மத்திய அரசு அதை நிராகரித்து விட்டது. இது நீதித்துறையில் குறுக்கிடும் செயல் என்றும் தனது 6 பக்க கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

மத்திய அரசு மறுப்பு: இது குறித்த செய்தி நேற்று வெளியான நிலையில், நீதிபதியின் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத மத்திய அரசு உயர் அதிகாரிகள் பத்திரிகைகளுக்கு தெரிவிக்கையில், நீதிபதிகள் பதவி உயர்வு, நீதிபதிகள் நியமனம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளில், இத்தனை நாட்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, நாங்கள் பொறுமையாக முடிவு எடுக்க எங்களுக்கு உரிமை உள்ளது. இதில் அவசரப்பட முடியாது. விசாகா என்பவரது வழக்கில், பாலியல் புகார் குறித்து உச்ச நீதிமன்றம் வகுத்த விதிமுறைகளை அதன் கொலிஜியம் பின்பற்றாததால்தான், நீதிபதி கிருஷ்ணா பட் நியமனம் தொடர்பான கோப்புகளை 2 தடவை திருப்பி அனுப்ப வேண்டியதாகி விட்டது. பெண் நீதிபதியின் பாலியல் புகாரை கொலிஜியம் கண்டுகொள்ளவில்லை என்பது தான் இதன் பொருள்.

தலையிடவில்லை: 2-வது தடவை நாங்கள் அந்த கோப்பை திருப்பி அனுப்பியபோது, அந்த பெண் நீதிபதி, பிரதமர் அலுவலகத்துக்கும், குடியரசுத் தலைவர் மாளிகைக்கும் புகார் அனுப்பியிருந்தார். அந்த புகார்கள், மத்திய சட்ட அமைச்சகத்துக்கு வந்து சேர்ந்தன. அதனை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி, அதன் கருத்தை கேட்பது வழக்கமான நடைமுறை. அதன்படி, உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு அந்த புகார்களை அனுப்பி, அவற்றை பரிசீலிக்குமாறு சட்டத்துறை கேட்டுக்கொண்டது. புகார்கள் மீது விசாரணை நடத்துமாறு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை நாங்கள் கேட்டுக்கொள்ள முடியாது. அந்த அதிகாரம் எங்களுக்கு இல்லை. எனவே, நாங்கள் நீதித்துறையில் தலையிடவில்லை.

மேலும், நீதிபதி கிருஷ்ணா பட் நிரபராதி என்று முன்பு விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில், பாதிக்கப்பட்ட பெண் நீதிபதி, தனது குற்றச்சாட்டை விளக்க நியாயமான வாய்ப்பு வழங்கப்பட்டதாக எந்த இடத்திலும் அவர்கள் குறிப்பிடவில்லை. இதன்மூலம், அவரது புகாரை கண்டுகொள்ளாதது தெளிவாகிறது" என்று அவர்கள் தெரிவித்தனர். கடந்த ஜனவரி 12-ந்தேதி, உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் வேறு 3 மூத்த நீதிபதிகளுடன் சேர்ந்து நிருபர்களை சந்தித்தார். அப்போது, வழக்குகளை ஒதுக்குவது குறித்து தலைமை நீதிபதி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். நீதித்துறை மீது நீதிபதிகளே குற்றச்சாட்டு எழுப்பியது நாட்டையே கதிக் கலங்க வைத்தது நினைவிருக்கலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close