கடவுள் ஹனுமன் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி, அனைத்து பிராமணர்கள் மகாசபையின் சார்பில் ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதி்த்யநாத், ராஜஸ்தானில் அண்மையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கடவுள் ஹனுமனை தலித் என குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சைக்குள்ளானது.
ஹிந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும்படி பேசியதற்காக யோகி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என அனைத்து பிராமணர்கள் மகாசபை வலியுறுத்தியிருந்தது. இந்த நிலையில், அதன் தலைவர் சுரேஷ் மிஸ்ரா இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு வரும் 11-ஆம் தேதி விராசணைக்கு வரவுள்ளது.