ஜட்ஜ் ஐயா... தீர்ப்பில் பிழை உள்ளது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு முறையீடு!

  Newstm Desk   | Last Modified : 16 Dec, 2018 01:20 pm
rafale-case-centre-seeks-correction-of-errors

ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பில் பிழை உள்ளதாகவும், தவறான புரிதலின் காரணமாக ஏற்பட்டுள்ள இந்தப் பிழையை திருத்த வேண்டும் என்றும்  மத்திய அரசு உச்சநீதிமன்றத்திடம் முறையிட்டுள்ளது.

ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் கூறியும், இதுதொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின்கீழ் விசாரணை நடத்த உத்தரவிட கோரியும் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அதிரடியாக உத்தரவிட்டது.

இந்த நிலையில், நாடாளுமன்ற பொது கணக்குக் குழு தலைவரும், மக்களவை காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே இத்தீர்ப்பு குறித்து நேற்று (சனிக்கிழமை) கூறும்போது, "ரஃபேல் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜியின் அறிக்கை, நாடாளுமன்றம் மற்றும் பொது கணக்குக் குழுவின் பார்வைக்கு வைக்கப்பட்டதுடன், அந்த அறிக்கையை இக்குழு ஆய்வு செய்ததாகவும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பொய்யான தகவலை தெரிவித்துள்ளது" என பகிரங்கமாக குற்றச்சாட்டினார்.

இதையடுத்து, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் துணைச் செயலாளர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், "நீதிமன்ற உத்தரவுபடி, ரஃபேல் விமானத்தின் விலை உள்ளிட்ட விவரங்கள் சீலிடப்பட்ட கவரில்  இந்த நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் அதில், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான மத்திய தலைமை தணிக்கைக் குழுவின் (சிஏஜி) அறிக்கையை நாடாளுமன்ற பொது கணக்குக் குழு ஆய்வு செய்ததாகவும்,  போர் விமான கொள்முதல் என்பதால் ரகசியம் காக்க வேண்டி,  அந்த அறிக்கையின் சாரம்சங்கள் மட்டுமே நாடாளுமன்றத்திலும், பொதுவெளியிலும் வைக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இலக்கண பிழையால் ஏற்பட்ட தவறான புரிதலின் காரணமாக, உச்சநீதிமன்ற தீர்ப்பின் 25-வது பத்தியில்,  "சிஏஜி அறிக்கையை, பொதுக் கணக்குக் குழு ஆய்வு செய்துக் கொண்டிருந்தது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தவறு, பொதுவெளியில் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடமளிக்கும் என்பதால் தீர்ப்பில் உள்ள பிழையை உடனே திருத்த வேண்டும் என மத்திய அரசின் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படுவதுதான் வழக்கம். ஆனால், ரஃபேல் வழக்கில் தீர்ப்பில் பிழை உள்ளதாகவும், அதனை திருத்தம் செய்யக் கோரியும் மத்திய அரசு மனுதாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close