சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவருக்கு ஆயுள் தண்டனை!

  Newstm Desk   | Last Modified : 17 Dec, 2018 11:06 pm
congress-leader-sajjan-kumar-convicted-by-delhi-high-court-in-anti-sikh-riots-case

சீக்கியர்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த 1984 -இல் நடைபெற்ற கலவரத்தில் 5 பேர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில், காங்கிரஸ் மூத்தத் தலைவர் சஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரதமராக இருந்த இந்திரா காந்தி, தமது மெய்க்காப்பாளர்களால், கடந்த 1984  அக்டோபர் 31- ஆம் தேதி சுட்டு கொல்லப்பட்டார். இதையடுத்து டெல்லி, பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்கள் வெடித்தன. இதில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட அடுத்த நாளே, அதாவது 1984  நவம்பர் 1-ஆம் தேதி டெல்லி கன்டோண்மென்ட் அருகே ராஜ் நகர் பகுதியிலும் கலவரங்கள் நடைபெற்றன. இதில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் மூத்தத் தலைவர் சஜன் குமார்  உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. சிறப்பு விசாரணை நீதிமன்றம், சஜன் குமாரை வழக்கிலிருந்து விடுவித்ததை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில்தான் சஜன் குமாருக்கு இன்று வாழ்நாள் ஆயுள் தண்டனை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருடன் இந்த கலவரத்தில் தொடர்புடைய ஓய்வுபெற்ற கப்பற்படை கேப்டன் பாஹ்மல், காங்கிரஸ் கட்சியின் ஆலோசகர் பால்வன் கோகர் உள்ளிட்ட 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சஜன் குமார் வரும் 31-ஆம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என்று கெடுவிதித்துள்ள நீதிமன்றம், அவருக்கு பலமான அரசியல் ஆதரவு இருந்து வந்ததால்தான் இத்தனை ஆண்டுகளாக அவர் இந்த வழக்கி்ல் தப்பித்து வந்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.

"ராஜீவ் குடும்பத்தை சிறையில் தள்ளும்வரை ஓயமாட்டோம்": "இந்தத் தீர்ப்பை வழங்கியதற்காக நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும், ஆனால், சஜன் குமாருக்கு மரண தண்டனை கிடைக்கும்வரை ஓயமாட்டோம்" என்றும் சிரோன்மணி அகாலிதளம் கட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், "சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்துக்கு காரணமான ராஜீவ் காந்தி குடும்பத்தினரை சிறையில் தள்ளும்வரை எங்களது சட்டரீதியான முயற்சிகள் தொடரும்" என்றும் அக்கட்சி சூளுரைத்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close