அகஸ்டா வெஸ்ட்லேண்ட் - இத்தாலி நீதிமன்றத்தில் போலி ஆவணங்கள் தாக்கல்: அமலாக்கத் துறை தகவல்

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 08:43 am
augusta-westland-fake-documents-submitted-in-italy-court-ed

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக, இடைத்தரகர்  கிறிஸ்டியன் மைக்கேல் தரப்பில் இத்தாலிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.

இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் ஹெலிகாப்டர்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்த முறைகேடு வழக்கின் விசாரணை தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் இடைத்தரகராக செயல்பட்ட பிரிட்டனைச் சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்டு, கடந்த மாதம் 4 -ஆம் தேதி இந்தியா அழைத்து வரப்பட்டார்.

இருவாரங்கள் சிபிஐ காவலில் விசாரிக்கப்பட்ட அவர், அதன் பின்னர் அமலாக்கத் துறையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு கிறிஸ்டியனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், அமலாக்கத் துறையின் ஏழுநாள் காவல் இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து கிறிஸ்டியன் மைக்கேல் டெல்லி பாட்டியலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

அப்போது, "இந்த வழக்கு தொடர்பாக இத்தாலிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களும் தவறானது என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன. தற்போது, கிறிஸ்டியன்  மைக்கேலின் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு ஹவாலா பணம் எப்படி வந்தது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது" என  அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கிறிஸ்டியன் மைக்கேலின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 26-ஆம் தேதி நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close