சிபிஐ இயக்குநர் நியமன வழக்கு விசாரணை: மூன்றாவது  நீதிபதியும் விலகல்!

  Newstm Desk   | Last Modified : 31 Jan, 2019 03:38 pm
3rd-judge-exits-interim-cbi-chief-case

மத்தியப் புலனாய்வு அமைப்பின்(சிபிஐ) இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கின்  விசாரணை அமர்விலிருந்து விலகுவதாக உச்சநீதிமன்றத்தின் மற்றொரு நீதிபதியான என்.வி. ரமணா இன்று தெரிவித்துள்ளார்.

சிபிஐ-யின் இடைக்கால இயக்குநராக  நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகோய் அடங்கிய அமர்வு விசாரிப்பதாக இருந்தது.

ஆனால்,  சிபிஐ இயக்குநரை தேர்ந்தெடுப்பதற்கான  உயர்நிலைக் குழுவில் தானொரு  உறுப்பினராக இருப்பதால், இந்த வழக்கை விசாரிக்க முடியாது எனக் கூறி, ரஞ்சன் கோகோய் விலகினார்.

அதைத்தொடர்ந்து, இந்த அமர்வில் இடம்பெற்றிருந்த மற்றொரு நீதிபதியான ஏ.கே. சிக்ரியும் விசாரணையிலிருந்து விலகுவதாக கடந்த வாரம் அறிவித்தார்.

இதையடுத்து, இவ்வழக்கின் விசாரணை என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு விசாரிப்பதாக இருந்தது. இந்த நிலையில் அவரும் இவ்வழக்கின் விசாரணை அமர்விலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.

நாகேஸ்வர ராவ் தமது சொந்த மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரது மகளின் திருமணத்தில் தான் பங்கேற்றேன். இந்த நிலையில், இவ்வழக்கை தாம் விசாரிப்பது சரியாக இருக்காது என தமது விலகலுக்கு நீதிபதி  ரமணா காரணம் தெரிவித்துள்ளார்.
இதனால், இந்த வழக்கு விசாரணைக்கு வருவதில் தாமதம் நீடிக்கிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close