சாரதா நிதி நிறுவன மோசடி குறித்த வழக்கின் விசாரணைக்குஉரிய ஒத்துழைப்பு அளிக்க கொல்கத்தா காவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி் சிபிஐ உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
மத்திய அரசின் சட்ட ஆலோசரான துஷார் மேத்தா சிபிஐ சார்பில் தாக்கல் செய்த மனுவில், "பலமுறை சம்மன் அனுப்பியும், கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பதுடன், தங்களின் விசாரணைக்கு அவர் தடைகளை ஏற்படுத்தி வருகிறார்.
மேலும் அவர் விசாரணை தொடர்பான ஆவணங்களையும் சிபிஐ வசம் ஒப்படைக்கமாட்டேன் என்கிறார். இதனால் இந்த வழக்கில் அவரையும் குற்றவாளியாக கருத வேண்டியுள்ளது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த வழக்கு விசாரணைக்கு மேற்கு வங்க மாநில அரசு தெரிவித்துவரும் எதிர்ப்பு குறித்தும் தமது மனுவில் சிபிஐ குறிப்பிட்டுள்ளது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் நாளைக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
முன்னதாக மனுவை விசாரணைக்கு ஏற்றுகொண்ட நீதிபதிகள், ராஜீவ் குமாருக்கு எதிரான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்கும்படி சிபிஐக்கு உத்தரவிட்டனர். அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகும்பட்சத்தில் ராஜீவ் குமார் கடுமையான தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.
newstm.in