ரஃபேல் விமான கொள்முதல் ஒப்பந்த வழக்கில், புதிய ஆதாரங்கள் எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று திட்டவட்டமாக கூறியுள்ளது.
ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் தொடர்பாக, இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி, இதுதொடர்பாக நீதிமன்றத்தின் கண்காணிப்பின்கீழ் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
ஆனால், இந்த வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்து, கடந்த ஆண்டு டிசம்பர் 14 -ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அடங்கிய அமர்வுமுன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "இந்த வழக்குத் தொடர்பாக எவ்வித ஆதாரங்களையோ, ஆவணங்களையோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அனுமதிக்க முடியாது" என தலைமை நீதிபதி திட்டவட்டமாக கூறினார்.
ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரபல ஆங்கில நாளிதழில் வெளியான கட்டுரையை ஆதாரமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரசாந்த் பூஷண் தரப்பில் கோரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, மத்திய அரசின் தலைமைச் சட்ட வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் வாதிடும்போது, " ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை மனுதாரர் தரப்பினர் திருடி வெளியிட்டுள்ளனர். இந்த ஆவணத் திருட்டு, சட்டப்படி பெரும் குற்றமாகும்" எனத் தெரிவித்தார்.
newstm.in