ரஃபேல் ஊழல் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் விசாரித்த போது, சமீபத்தில் நடைபெற்ற F16 போர்விமானங்கள் தாக்குதல் போன்றவற்றை எதிர்கொள்ள, நாட்டுக்கு ரஃபேல் போர்விமானங்கள் மிக மிக அவசியம் என்று மத்திய அரசு சார்பில் கூறப்பட்டது.
ரஃபேல் விவகாரத்தில் ஊழல் நடைபெறவில்லை என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை சீராய்வு செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது. அப்போது, ரஃபேல் பேச்சுவார்த்தைகளில் பிரதமர் அலுவலகம் குறுக்கிட்டதாக வெளியான அறிக்கை, திருடப்பட்ட ஆவணத்தை மையமாக கொண்டது என மத்திய அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து, திருடப்பட்ட ஆவணம் குறித்து மத்திய அரசு என்ன இதுவரை நடவடிக்கை எடுத்தது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு, தொடர்ந்து, யார் ஆவணத்தை திருடியது என்பது குறித்து விசாரணை செய்து வருவதாக வேணுகோபால் தெரிவித்தார்.
மேலும், ரஃபேல் போர்விமானங்கள் நாட்டுக்கு மிக அவசியம் என மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டது. பாகிஸ்தானின் F16 ரக விமானங்களை எதிர்கொள்ள ரஃபேல் விமானம் தேவை என அட்டர்னி ஜெனரல் கூறினார். "நாட்டை F16 போன்ற போர்விமானங்கள் தாக்குதலில் இருந்து பாதுகாக்க ரஃபேல் போர்விமானங்கள் மிக அவசியம். ரஃபேல் இல்லாமல் எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்" என்றார் வேணுகோபால்.
மேலும், "போர்விமானங்கள் விவகாரத்தில் குறுக்கிட உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. எதனை போர்விமானங்கள் நம்மிடம் உள்ளன என்று உச்ச நீதிமன்றத்திற்கு தெரியுமா?" என்று கூறினார். அதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப், "ஒருவேளை இதில் பெரிய குற்றம் நடந்திருந்தால், தேச பாதுகாப்பின் பெயரில் அதை மூடி மறைக்க வேண்டும் என சொல்கிறீர்களா? என கேள்வி எழுப்பினார்.
newstm.in