எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகருக்கு முழு அதிகாரம் உள்ளது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

  Newstm Desk   | Last Modified : 17 Jul, 2019 10:56 am
sc-judgement-on-karnataka-crisis

எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொள்ளும்படி சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும் அதேபோன்று அதிருப்தி எம்.எல்.ஏக்கள், நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்வது அவர்களது தனிப்பட்ட விருப்பம் என்று கர்நாடக விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 

கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் - மஜத கூட்டணி எம்.எல்.ஏக்கள் 16 பேர் (காங்கிரஸ் - 13, மஜத -3) தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.  ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி, கர்நாடக எம்.எல்.ஏக்கள் 15 பேர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கினை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரணை செய்தது. 

கடந்த வாரம் நடைபெற்ற இவ்வழக்கின் முதல் விசாரணையில், எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை விதித்து வழக்கின் விசாரணை ஜூலை 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

அதைத்தொடர்ந்து நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், எம்.எல்.ஏக்கள் தரப்பில் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி மற்றும் சபாநாயகர் தரப்பில் இருந்து அபிஷேக் சிங்வி ஆஜராகி வாதிட்டனர். நேற்று நாள் முழுவதும் நடைபெற்ற வாதத்திற்கு பிறகு வழக்கின் தீர்ப்பானது இன்று காலை 10.30 மணிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பின் விபரம் பின்வருமாறு: 

எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார். ஆனால், விரைந்து நடவடிக்கை எடுக்கும்படியோ, ராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொள்ளும்படியோ சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது. சபாநாயகர் எப்போது வேண்டுமானாலும் முடிவெடுக்க அவருக்கு முழு அதிகாரம் உள்ளது.

அதுபோன்று நாளை கர்நாடக சட்டப்பேரவையில் நடக்கவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளுமாறு எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவிட முடியாது. அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close