குஜராத் அமைச்சரவையில் விரிசல்? போர்க்கொடி தூக்கிய துணை முதல்வர்

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 30 Dec, 2017 11:40 pm

குஜராத் அமைச்சரவை பதவி ஏற்று ஒரு சில நாட்கள்தான் ஆகின்றது. அதற்குள்ளாக முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன. 

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க முழு மெஜாரிட்டி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. விஜய் ரூபானி இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றார். அவருடன், நிதின் பட்டேல் துணை முதல்வராக பொறுப்பேற்றார். அமைச்சர்களுக்கான துறை ஒதுக்கீடு நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், துணை முதல்வர் வசம் இருந்த முக்கிய துறைகளான நிதி, நகர்புற வளர்ச்சி மற்றும் பெட்ரோலியம் அவரிடமிருந்து பறிக்கப்பட்டது.

அமைச்சரவையில் இரண்டாவது இடத்தில் உள்ள தன்னிடமிருந்து நிதிதுறை உள்ளிட்ட துறைகள் பறிக்கப்பட்டதை அவமானமாக நிதின் பட்டேல் கருதுகிறார். இதனால் அவர் ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. மேலும், அவர் பா.ஜ.க-வுக்கு முழுக்கு போடப் போவதாகவும் கூறப்பட்டது. இதனால், குஜராத் அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அவரிடம் கேட்டபோது, "நான் 40 ஆண்டு காலமாக பா.ஜ.க-வில் இருக்கிறேன். என்னுடைய வருத்தத்தை, உணர்வகளை கட்சித் தலைமையிடம் தெரிவித்திருக்கிறேன். எந்த துறை ஒதுக்கப்படுகிறது, எவ்வளவு வலிமையான துறை என்பது பிரச்னை இல்லை. இது என்னுடைய சுய மரியாதை சார்ந்தது. கட்சித் தலைமை மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது" என்றார்.

கட்சியில் இருந்து விலகப்போவதாக செய்திகள் வெளியானது குறித்து கேட்டபோது, "40 ஆண்டுகளாக என்னுடைய வாழ்வை கட்சிக்கு அர்ப்பணித்துள்ளேன். கட்சியில் இருந்து விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை" என்றார்.

இதற்கிடையே, துணை முதல்வர் நிதின் பட்டேல் கட்சியை உடைத்து வெளியே வந்தால் அவரை வெளியில் இருந்து ஆதரிக்க தயாராக உள்ளதாக காங்கிரஸ் கட்சி தலைவர் பேட்டி அளித்துள்ளார். அதேபோல், பதிதார் அமைப்பின் தலைவர் ஹர்திக் பட்டேலும் கூட, நிதிஷ் பட்டேல் வெளியே வந்தால், துணை முதல்வர் என்ற பதவியைக் காட்டிலும் சிறந்த பதவியை காங்கிரஸ் கட்சியிடம் பேசி பெற்றுத் தர தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இதனால், குஜராத் அரசியலில் என்ன நிகழப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நிதிஷ் பட்டேலும் தன்னுடைய ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.