ரவுடித்தனம் செய்த காங் எம்.எல்.ஏ மகன் சரண்!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 19 Feb, 2018 04:57 pm

பெங்களூரில் ரவுடித்தனம் செய்து அப்பாவி ஒருவரை அடித்து உதைத்த காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-வின் மகன் முஹம்மத் நலபாட் போலீசில் சரணடைந்துள்ளார். 

பெங்களூரின் ஷாந்திநகர் தொகுதியின் எம்.எல்.ஏ என்.ஏ ஹேரிஸ். இவரது மகன் முஹம்மத் நலபாட். இவர் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியாகவும் இருக்கிறார். கடந்த சனிக்கிழமை மது பார் ஒன்றில், நண்பருடன் சாப்பிட நலபாட் சென்றிருக்கிறார். அப்போது அவர் டேபிள் அருகே, வித்வாத் என்ற கல்லூரி மாணவர் கால் முறிவு காரணமாக நாற்காலியில் கால் வைத்தபடி சாய்ந்து உட்கார்ந்திருந்தார். இதற்கு நலபாட் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். பதிலுக்கு அந்த நபர் உங்கள் வேலை பார்த்துச் செல்லுங்கள் என்று கூறியிருக்கிறார். 

இதனால் கோபம் கொண்ட நலபாட் மற்றும் அவருடன் வந்தவர்கள் வித்வாத்தை அடித்து உதைத்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த வித்வாத், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். முகம் வீங்கிய நிலையில், அடிவாங்கிய வித்வாத் பேசும் பரிதாப வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகிவிட்டது. 

ரவுடித்தனம் செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-வின் மகனுக்கு எதிராகப் பா.ஜ.க, ஆம் ஆத்மி, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களை நடத்தின. கர்நாடகாவில் தேர்தல் நெருங்குவதால் மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு குறைவதைத் தவிர்க்க, வேறு வழியின்றி நலபாட்டை ஆறு ஆண்டுகளுக்குக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் நீக்கினார் ராகுல் காந்தி. நலபாட் மீது பெங்களூரு கப்பன்பார்க் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரைத் தீவிரமாகத் தேடி வந்தனர். 

நலபாட் எங்கு என்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது. அவனது தந்தையும் தெரியாது என்று சாதித்தார். இது குறித்து நலபாட்டின் தந்தை ஹேரிஸ் கூறுகையில், "சம்பவத்தைக் கேள்விப்பட்டவுடன் நலபாட்டைத் திட்டினேன். அதன்பிறகு அவன் மொபைல் சுவிட் ஆஃப் செய்துவிட்டு எங்கோ சென்றுவிட்டான்" என்றார். 

கிட்டத்தட்ட 36 மணி நேரம் நலபாட் எங்கு இருந்தார் என்றே தெரியவில்லை. அவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், இன்று திடீரென்று தன்னுடைய வழக்கறிஞருடன் நலபாட் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். தன்னுடைய தரப்பு விளக்கத்தை அளித்துவிட்டு, ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். ஆனால், அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருப்பதால் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், நலபாட்டைப் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close