டெல்லி அரசு பள்ளிகளில் ஜூலை 2 முதல் 'மகிழ்ச்சி பாடத்திட்டம்'

  Newstm News Desk   | Last Modified : 21 Jun, 2018 10:26 am

happiness-curriculum-in-delhi-government-school-from-july-2

டெல்லியில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் 8 லட்சம் மாணவர்களுக்கு 'மகிழ்ச்சி பாடத்திட்டம்' என்னும் புதிய வகுப்பு வரும் ஜூலை 2ம் தேதி முதல் துவங்க உள்ளது. 

தியானம், நீதி நெறிமுறை, மூளைக்கு பயிற்சி உள்ளிட்ட பன்முகத்திறமை கொண்டவர்களாக மாணவர்களை உருவாக்கி மகிழ்விப்பது இந்த திட்டத்தின் அடிப்படி கொள்கையாகும். பிற்காலத்தில் பல்வேறு தொழில்களில் பணிபுரியும் போது நிதானத்துடனும், பொறுமையாகவும், புன்சிரிப்புடனும் பிரச்னைகளை எதிர்கொண்டு சமுதாயத்திற்கு சிறப்பாக சேவை செய்யும் வகையில் இளம் பருவத்திலேயே மாணவர்களை உருவாக்குவது திட்டத்தின் முக்கிய நோக்கம்.மகிழ்ச்சி பாட திட்டம் வடிவமைப்பதற்கு 35 முதல் 40 வல்லுநர்கள் கொண்ட குழுவை டெல்லி கல்வி அமைச்சர் சிசோடியா ஜனவரி மாதம் உருவாக்கி இருந்தார். அந்தக் குழுவினர் தயாரித்த பாடதிட்ட வரைவறிக்கைகள் பலநிலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இறுதி வரைவு அறிக்கை உருவாகி உள்ளது. 

அதையடுத்து சிசோடியா தலைமையில் நடைபெற்ற கல்வித் துறை உயரதிகாரிகள் கூட்டத்தில் இறுதி வரைவறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இது குறித்து நிருபர்களுக்கு சிசோடியா கூறும் போது, "நர்சரி படிப்பு தொடங்கி 8ம் வகுப்பு வரை 1,000க்கும் அதிகமான அரசு பள்ளிகளில் படிக்கும் 8 லட்சம் மாணவர்கள் இந்த பாட திட்டத்தால் பலனடைவார்கள். திபெத்திய மத தலைவர் தலாய் லாமா ஜூலை 2ம் தேதி துவங்கி வைக்கும் இந்த மகிழ்ச்சி பாடதிட்டம், பள்ளிகளில் ஒரு பாடமாக மாணவர்களுக்கு உடனடியாக தொடங்கப்படும். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் சென்றிருந்தபோது, அங்கும் மகிழ்ச்சி வகுப்புகள் நடைபெறுவதாக என்னிடம் தெரிவித்த அங்கிருந்த கல்வியாளர்கள், இருந்தும் 1,000 பள்ளிகள், 8 லட்சம் மாணவர்கள் என்ற மெகா அளவில் செயல்படுத்தவில்லை என மாநில அரசின் திட்டத்துக்கு பாராட்டு தெரிவித்தனர்" என்றார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close