வெள்ளத்தால் சேதம் அடைந்த வீடுகளை சீரமைக்க ரூ.1 லட்சம் வட்டி இல்லா கடன்: பினராயி விஜயன்

  சுஜாதா   | Last Modified : 25 Aug, 2018 08:18 am
kerala-floods-interest-free-loan-of-rs-1-lakh

மழை வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகளின் சீரமைப்பு பணிகளுக்காக, பெண்களை தலைவராக கொண்ட குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். இதற்கான வட்டியை அரசே செலுத்தும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவால் பேரழிவு ஏற்பட்டது. மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 324 பேர் பலியாகியுள்ளதாகவும்,  வெள்ளத்தில் சிக்கிய சுமார் 10 லட்சம் பேர் மீட்கப்பட்டு அரசு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருந்தார்.

தற்போது மழை நின்று  விட்டதால் மாநிலம் முழுவதும் மறுசீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கேரள வெள்ள நிவாரணத்திற்கு உலக நாடுகள், இந்தியா முழுவதுமுள்ள மாநிலங்கள் என பல்வேறு தரப்புகளில் இருந்து நிவாரண உதவிகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில்,  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன.

போர்க்கால அடிப்படையில் நடந்து வரும் இந்த பணிகளையும், மழை, வெள்ளத்தில் சிக்கியவர்கள் தங்க வைக்கப்பட்டு இருக்கும் முகாம்களையும் முதலமைச்சர்  பினராயி விஜயன் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:– "மாநிலம் முழுவதும் மறுசீரமைப்பு மற்றும் துப்புரவு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதன்மூலம் 60,593 வீடுகள் மற்றும் 37,626 கிணறுகள் தூய்மைப்படுத்தப்பட்டு உள்ளன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 50 துணைமின் நிலையங்களில் 41 நிலையங்கள் செயல்பட தொடங்கி உள்ளன.

வியாழக்கிழமை (நேற்று முன்தினம்) நிலவரப்படி 2,774 முகாம்களில் 10,40,688 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த முகாம்கள் பெரும்பாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளிலேயே அமைக்கப்பட்டு உள்ளன. எனவே ஓணம் விடுமுறையை தொடர்ந்து அவர்கள் அனைவரும் வேறு அரங்குகள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவர்.
இந்த முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் அனைவருக்கும் உணவு உள்ளிட்ட வசதிகள் அனைத்தும் கிடைப்பதாக அவர்கள் திருப்தி வெளியிட்டு உள்ளனர். வெள்ளத்தால் சேதமடைந்துள்ள தங்கள் வீடுகளை குறித்தே அவர்கள் கவலைப்படுகின்றனர். அவை அனைத்தும் சரி செய்யப்படும்.

மழை வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகளின் சீரமைப்பு பணிகளுக்காக, பெண்களை தலைவராக கொண்ட குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். இதற்கான வட்டியை அரசே செலுத்தும். மேலும் முகாம்களில் இருந்து வீடுகளுக்கு திரும்புவோருக்கு 5 கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்கள் அடங்கியை பை வழங்கப்படும்." இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close