தெலங்கானாவில் ஒரு உடுமலை சம்பவம்: கர்ப்பிணி கண் முன்னே காதல் கணவர் படுகொலை

  ஐஸ்வர்யா   | Last Modified : 16 Sep, 2018 12:43 am
dalit-man-hacked-to-death-in-nalgonda-honour-killing-suspected

தெலங்கானாவில் கர்ப்பிணி மனைவியின் கண் முன்னே, காதல் கணவர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் ஜோதி மருத்துவமனை வளாகத்தில் பிரனாய் பெருமல்லா என்ற இளைஞர் அடையாளம் தெரியாத நபரால் படுகொலை செய்யப்படும் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சியில், பிரனாய் அவரது மனைவி அம்ருதா, பிரனாயின் சகோதரியுடன் மருத்துவமனையில் இருந்து வெளியேறி நடந்து செல்கின்றனர். அவர்கள் பின்னால் ஒருவர் நெருக்கமாக நடந்து செல்கிறார்.

அவர்கள் நுழைவாயிலை கடக்கும் போது சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனத்துக்குப் பின்னால் பிரனாயை தள்ளிய மர்ம நபர், தன் கையில் இருந்த பயங்கர ஆயுதத்தால் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே பிரனாய் துடிதுடித்து உயிரிழந்தார். சில நொடிகளில் என்ன நடக்கிறது என்பதை உணர முடியாத அம்ருதாவும் பிரனாயின் சகோதரியும் உதவி கேட்டு மருத்துவமனையை நோக்கி ஓடுகிறார்கள். ஆனால், அதற்குள்ளாகவே பிரனாய் மரணம் அடைந்திருந்தார். 

மருத்துவமனைக்கு ஓடிய போது அம்ருதா மயங்கி விழுந்ததை அடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரனாய் மரணம் அடைந்தது அவருக்குத் தெரிவிக்கப்படவில்லை. அம்ருதாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில், பிரனாய் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். அம்ருதா வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர். பொறியியல் படிக்கும் போது இருவரும் காதலித்து 6 மாதங்களுக்கு முன்பு அம்ருதா பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். தற்போது அம்ருதா கர்ப்பிணியாக உள்ளார்.

மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வந்த போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அம்ருதாவின் தந்தை ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். திருமணம் முடிந்த நாள் முதல், பிரனாயை தன் பெண்ணை விட்டு பிரிந்து செல்லுமாறு அம்ருதாவின் தந்தையும், சித்தப்பாவும் தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும், இந்த சூழ்நிலையில் இந்த படுகொலை நடந்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. 

தந்தையே தன்னுடைய மகளின் காதல் கணவனை கொன்றிருப்பது, அதுவும் சாதி பிரச்னைக்காக ஆணவக் கொலை செய்திருப்பது தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் உடுமலைப்பேட்டையில் இதேபோன்று  சங்கர் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close